''நீ வாங்குற சம்பளத்துக்கு சோறு ஒன்னுதான் கேடு" - துப்புரவு தொழில் செய்யும் ஊழியர்! | Tamilnadu school labourers protest in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (02/02/2018)

கடைசி தொடர்பு:20:56 (02/02/2018)

''நீ வாங்குற சம்பளத்துக்கு சோறு ஒன்னுதான் கேடு" - துப்புரவு தொழில் செய்யும் ஊழியர்!

துப்புரவுப் பணியாளர்கள் கைது

துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குத் தங்களுடைய அன்றாட உணவைக்கூட நிம்மதியாக உண்ணமுடியாத அவலநிலை இங்குள்ளது. அப்படியானோருக்கு மிகவும் குறைந்த மாதச் சம்பளம் வழங்குவதுடன், அவர்கள் இழிவாகவும் நடத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணி செய்துவரும் ஊழியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களாக பலர் வேலை செய்துவருகின்றனர். இந்த நிலையில், மேலும் கூடுதலாகக் கடந்த 2012-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படித்தவர்கள் மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்த்ப்பட்டனர். அவர்கள், இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அத்துடன் அவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இதையடுத்து, தங்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவர்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அவர்களை சென்னை மாநகரக் காவல்துறையினர் கைது செய்து ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் சமுதாயக் கூடத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். அவர்கள் மீண்டும் போராட்டத்தைக் கைவிடாமல், சென்னை தேனாம்பேட்டையில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அந்த இடத்துக்கு விரைந்த போலீஸார் மீண்டும் அவர்களைக் கைதுசெய்து, அரசுப் பேருந்தில் ஏற்றிச் சென்றனர். 

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட கதிரவன், "நாங்கள் பள்ளிகளில் துப்புரவுப் பணி செய்து வருகிறோம். ஆனால், மாதச் சம்பளம் என்னவோ ரூ. 3000 வரைதான் கிடைக்கிறது. இந்தச் சம்பளம் எங்களின் குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. மேலும், எங்கள் பணியும் நிரந்தரம் செய்யப்படவில்லை. எத்தனையோ முறை போராடியும் எங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதனால், தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். துப்புரவுப் பணி மட்டும் நாங்கள் செய்வதில்லை, பள்ளியில் இருந்து வங்கிக்குச் செல்லவும், இதர பல வேலைகளுக்கும் எங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 'துப்புரவுப் பணி செய்பவர்கள்தானே' என்று மிகவும் இழிவாக வேறு நடத்துகிறார்கள். ஒரு பக்கம் சம்பளப் பிரச்னை என்றால், இன்னொரு பக்கம் கேவலமாக நடத்துகிறார்கள் என்ற வருத்தமும் உள்ளது" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். 

துப்புரவுப் பணி செய்யும் பெண் ஒருவர் பேசுகையில், "பிள்ளைகளுக்குத் தேவையானதைக்கூட செய்து கொடுக்க முடிவதில்லை. ஆறு வருடங்களாக போராடியும் எந்தப் பயனும் இல்லை. சில சமயங்களில் பிள்ளைகள் எங்கள் அருகில் வந்து படுத்து உறங்கக்கூட யோசிக்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுக்க முடியவில்லை என்ற வேதனை எங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. எங்களுடன் வேலைக்கு வந்தவர்களில் 2,000 பேரை இரவு காவலர் பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு 20,000 ஆயிரத்தும் அதிகமாகச் சம்பளம் வழங்கப்படுகிறது. பணி நிரந்தரமும் செய்துள்ளனர். துப்புரவுப் பணி செய்வது மட்டுமே எங்களை இழிவுப்படுத்தக் காராணமா? இந்த அரசாங்கம் எங்களுடைய நியாயமான கோரிக்கையைக்கூட நிறைவேற்றாமல் இருக்கிறது" என்றார்.

 

 

போராட்டத்தில் ஈடுபட்ட இன்னொருவர் கூறுகையில்,"காலைல வேலைக்குப் போகும்போது, மதியச் சாப்பாட்டை பொண்டாட்டி கொடுக்கும் போதே 'நீ வாங்குற சம்பளத்துக்கு சோறு ஒண்ணுதான் உனக்குக் கேடுன்னு' கேக்குறா. இதையெல்லாம் கேக்கறப்போ, மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு" என்று வேதனையுடன் பேசினார்.

இரவில் கைதுசெய்த பள்ளிக்கூட துப்புரவுப் பணியாளர்களை, மாநகராட்சி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். பின்னர், அவர்களின் பெயர், முகவரி என எல்லா தகவல்களையும் வாங்கியுள்ளனர். கலைந்து செல்லவில்லை என்றால் ரிமாண்ட் செய்வதாகக் கூறியுள்ளனர். இரவு 10.45 மணியளவில் அங்கிருந்த எல்லோரையும் அவரவர் ஊர்களுக்குக் கலைந்துசெல்ல வலியுறுத்தியுள்ளார்கள். அதனால், அனைவரும் அவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

நூற்றுக்கணக்கில் மாணவ-மாணவிகள் கல்வி பயிலும் பள்ளிகளில் சுகாதாரத்துடன் தொடர்புடைய துப்புரவுப் பணியை ஒருநாள் அந்தப் பணியாளர்கள் நிறுத்திவிட்டால், சுற்றுப்புறம் என்னவாகும் என்பதை அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் அவர்கள் பள்ளிகளில் வேலை பார்ப்பவர்கள். குழந்தைகளின் சுகாதாரத்தைப் பாதுகாப்பவர்கள். பொருளுதவியோ, பண உதவியோ செய்வதையும் தாண்டி, அவர்களுக்கான குறைந்தபட்ச மரியாதையை அளித்து, அவர்களை அவமானப்படுத்தாமல் இருக்கலாம். அதுவே அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுடன் கூடிய போராட்டத்துக்கு பதிலளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close