பாதிக்கப்பட்ட மக்கள் உறுதியாகப் போராடினால் நீதியைப் பெறலாம்..! எவிடென்ஸ் கதிர் நம்பிக்கை

மன்னார்குடி அருகே கோட்டூர் கீழமருதூர் கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த அமிர்தவல்லியும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த பழனியப்பனும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு ஒருவருடம் கழித்து ஊருக்கு வந்தபோது   பழனியப்பனின் அண்ணண்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மகேந்திரன், துரைராஜ் ஆகியோர்  அமிர்தவல்லி, பழனியப்பன் மற்றும் பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையையும் படுகொலை செய்தனர். ஆணவக் கொலையில் ஒரே நேரத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சை நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் பழனியப்பனின் அண்ணண்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், கூலிப்படையினர் மகேந்திரன், துரைராஜ் ஆகியோரைக் குற்றவாளிகள் என்று கடந்த 30-ம் தேதி நீதிபதி அறிவித்தார்.  

ஆணவக்கொலை

இதுபற்றி பேசிய அமிர்தவல்லியின் தாயார் ரோஜினாவதி, ''என் மகளை, கல்யாணம் பண்ணிக்கலாம்னு பழனியப்பன் சொன்னபோது, அவங்க ஆளுங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு எவ்வளவோ சொல்லி மறுத்திருக்கா. அதையும் மீறி அவர் உறுதியா இருந்ததால் வெளியூரில் திருமணம் செய்து வாழ்ந்தார்கள். அப்போது நாங்கள் அனுபவித்த துன்பங்கள் அதிகம். எங்க வீட்டை கொளுத்த வந்தார்கள். தினமும் வீட்டு வாசலில் அசிங்கமாகத் திட்டுவார்கள். எங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தது. அப்புறம் எவிடென்ஸ் அமைப்பில் சொன்னப் பிறகு, அவங்கதான் இந்த வழக்கை நடத்தினாங்க. எனக்கு நியாயம் கிடைக்குமானு சந்தேகம் இருந்துச்சு. இப்ப, கொலைகாரங்களுக்கு கோர்ட்டு தண்டனைக் கொடுத்தது மனசுக்கு ஆறுதலா இருக்கு' என்றார் அழுதபடி.

இதுபற்றி தெரிவித்த எவிடென்ஸ் கதிர், ''பாதிக்கப்பட்ட எளிய மக்கள் உறுதியாகப் போராடினால் நீதியைப் பெறலாம் என்பதற்கு சமீபகாலமாக ஆணவக்கொலை வழக்கில் வருகின்ற தீர்ப்புகள் உணர்த்துகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் அதிகமாக இருந்தும் இந்தக் கொடுமைக்கு எதிராக போராடவோ, கொல்லப்பட்ட அமிர்தவல்லியின் குடும்பத்துக்கு உதவவோ முன்வரவில்லை. அவர்களின் உறுதிதான் இன்று இந்தத் தீர்ப்பை வாங்கியுள்ளது. ஒரு வருட காலத்துக்குள் ஆணவக்கொலக்கு எதிராக வழங்கப்பட்ட மூன்றாவது தீர்ப்பு. இனிமேலாவது சாதி வெறி குறைந்தால் சமூகத்துக்கு நல்லது' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!