வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (03/02/2018)

கடைசி தொடர்பு:04:00 (03/02/2018)

குறிப்பிட்ட சாதியினருக்கே முன்னுரிமை..! பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சை

சமூக நீதி காத்த பெரியாரின் பெயரை தாங்கி நிற்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதல்வர் சார்ந்த சமுதாயத்தினரே மிக முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். இதனால் மற்ற சமுதாயத்தச் சார்ந்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று அங்கு பணிபுரியும் அலுவலர்கள் வேதனை அடைந்து வருகிறார்கள்.

இதுப்பற்றி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ''ஒரு பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய தூண்களாக இருப்பவர்கள் துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் நூலகத்துறை பேராசிரியர், உடற்கல்வித்துறை இயக்குநர். இவர்களே ஒரு பல்கலைக்கழகத்தை இயக்கக் கூடிய மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள்.

துணைவேந்தர் குழந்தைவேல், பதிவாளர் மணிவண்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லீலா, நூலகத்துறை பேராசிரியர் சுப்பிரமணியன் உடற்கல்வித்துறை இயக்குநராக இருந்த அங்கமுத்து என அனைவரும் முதல்வர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். உடற்கல்வித் துறை இயக்குநர் அங்கமுத்து மறைவையடுத்து தற்போது அப்பதவி காலியாக உள்ளது. இப்படி முக்கிய பதவிகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரே இருந்து வருகிறார்கள்.

இது தவிர பெரியார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 27 துறைகள் இயங்குகிறது. இதில் தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி, கனிணி அறிவியல்துறைத் தலைவர் தங்கவேல், உணவு அறிவியல் துறை தலைவர் பூங்கொடி, சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவர் முருகேசன், ஆடை வடிவமைப்பு துறை தலைவர் லட்சுமி மனோகரி (பொறுப்பு), தாவரவியல் துறைத் தலைவர் செல்வம் (பொறுப்பு), எரிசக்தி துறைத் தலைவர் ரமேஷ்குமார் (பொறுப்பு),புள்ளியல் துறைத் தலைவர் பிரகாஷ் (பொறுப்பு) இப்படி 27 துறைத் தலைவர்களில் 8 பேரும் மேலே உள்ள சமுதாயத்தையே சேர்ந்தவர்கள். இப்படி பெரியார் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், அலுவலக ஊழியர்கள் என எதிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை'' என்று கொந்தளித்து வருகிறார்கள்.