சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! - 2 பேர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். பெரிய அளவில் விபத்து நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ள நிலையில், இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில், சிவகாசியைச் சேர்ந்த ராஜாசிங் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டத்துறையின் அனுமதிபெற்று நடத்தப்பட்டுவரும் இந்த ஆலையில், 70 அறைகளில் பட்டாசு தயாரிப்பு நடந்துவருகிறது. இன்று வழக்கம்போல இந்த ஆலையில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

சிவகாசி

இன்று மாலை நான்கு மணி அளவில், ஆலையில் உள்ள ஓர் அறையில் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த செந்தில், திருத்தங்கலைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோர் பட்டாசுக்கான மருந்துகளைக் கலந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு மருந்துகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், செந்தில், மூர்த்தி இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். தகவலறிந்த எம்.புதுப்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்துகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 
கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்த பட்டாசு ஆலை வேலை நிறுத்தத்துக்குப் பின், இப்போதுதான் செயலபடத்தொடங்கியுள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!