வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (03/02/2018)

கடைசி தொடர்பு:08:20 (03/02/2018)

’’வரி செலுத்தவில்லை என்றால் சீல் வையுங்கள்!’’ - மதுரை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாநகராட்சி

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், சுந்தரராஜ் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,  ’’மாட்டுத்தாவணி  (எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ) முதல் சர்வேயர் காலனிக்குச் செல்லும் 120 அடி சலை மற்றும் மாட்டுத்தாவணியிலி ருந்து சம்பக்குளம், மூன்று மாவடி வழியாக அய்யர் பங்களா செல்லும் சாலையையும் சீரமைக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், சாலைகளைச் சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே, இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

ஏற்கெனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போதிய அளவு நிதி இல்லாததே சாலைகள் சீரமைக்கப்படாததன் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று (3.2.2018), இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் நேரில் ஆஜராகி, மதுரை மாநகராட்சியில் போதிய நிதி இல்லை என்றும், சொத்து வரி நிலுவைத்தொகை ரூ.168.92 கோடி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, புதிதாக ஒரு வாரத்தில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதனடிப்படையில் வர்த்தக நிறுவனங்கள் 2 வாரங்களிலும், குடியிருப்புகள் 4 வாரங்களிலும் சொத்து வரி நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவிட்டனர். தவறும்பட்சத்தில், சீல் வைத்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும், அழகர்கோவில் முதல் மாட்டுத்தாவணி வரையிலான சாலையின் பழுதுபார்க்கும் பணியை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டு, அது குறித்தும் வரி வசூல் குறித்தும் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க