’’பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு ஒழிக்கப்படுகின்றன!’’ - மதுரை மாநாட்டில் விளக்கம்

இந்தியாவுக்கான மக்கள் இயக்கம் சார்பில், இன்சூரன்ஸ், பி.எஸ்.என்.எல், வங்கி வேலைவாய்ப்பு பாதுகாப்பு சிறப்பு மாநாடு மதுரையில் நேற்று (2.2.2018) நடந்தது. 

இந்தியாவுக்கான

இந்த மாநாட்டின் நோக்கம்குறித்துப் பேசியவர்கள், 'இந்தியா சுயசார்புடைய பொருளாதார நாடாகத் திகழ வேண்டும் என்பதற்காகப் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மக்கள் சேமிப்புக்கு பாதுகாப்பு அரணாக உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி, கடந்த 60 ஆண்டுகளாக அபரிமிதமான வளர்ச்சியில் வைரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது.கடந்த 1956-ம் ஆண்டில், 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று 25,75,028 கோடி ரூபாய் மதிப்புடன் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த நிறுவனம் மத்திய, மாநில அரசு  நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக்கும் தனியாருக்கும் தொழில்துறையில் முதலீடு செய்ய அனுமதித்தாலும், மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்களாகப் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் விளங்குகின்றன.

இப்படி சிறந்து விளங்கும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள்மீது பல மறைமுகத் தாக்குதல்கள் நடக்கின்றன. பாலிசிகளுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது. இதுபோலவே வங்கிகளைக் கடன் வழங்கும் நிறுவனமாக மட்டும் மாற்றி, அதன் இயக்குநர் குழுவுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி, பொதுமக்களுக்கு சுமைகளை ஏற்றுகிற எஃப்.ஆர்.டி.ஐ. மசோதாவைக் கொண்டுவந்துள்ளனர். 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தையும் இரண்டாகப் பிரித்து, ஒன்றை டாடா நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார்கள். பி.எஸ்.என்.எல்-ஐ கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறார்கள். இன்று, நம் நாட்டில் பொருளாதாரத் தேக்க நிலை ஏற்படக் காரணமே, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காததே. வருடத்துக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகச் சொன்ன மத்திய அரசின் வாக்குறுதி காற்றில் பறக்கிறது. வருடத்துக்கு வேலை தேடி 12 கோடி இளைஞர்கள் தயாராகிவருகிறார்கள். இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டுசெல்ல இந்தப் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது' என்று தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!