வெளியிடப்பட்ட நேரம்: 05:40 (03/02/2018)

கடைசி தொடர்பு:07:57 (03/02/2018)

காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்..! திருச்சி காவல் ஆணையாளர் அறிவுரை

ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி திருச்சி போலீஸார் அபராதம் விதிக்கிறார்கள். இது, திருச்சியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால், சமீபகாலமாக வாகன விபத்துக்கள் குறைந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

dr amalraj ips

அந்த அறிக்கையில், 'நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி இறப்பதைத் தடுக்கும் பொருட்டு, சீட் பெல்ட்  அணியச் செய்வதற்கான சட்டத்தை அமல்படுத்தவும், திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீட் பெல்ட் அணிவதன் முக்கியதுவம்குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும், வாகனத் தணிக்கை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு, 638 சாலை விபத்துகள் திருச்சி மாநகரில் நடைபெற்றுள்ளது. அவற்றில் 139 பேர் இறந்துள்ளனர். 782 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வருடம், இதுவரை 56 விபத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் 14 பேர் இறந்துள்ளனர், 52 பேர் காயமடைந்துள்ளனர்.

குறிப்பாக, கடந்த 2017-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 375 நான்கு சக்கர வாகன விபத்துகளில், சீட் பெல்ட் அணியாமல் சென்று விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 73.  532 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று இந்த வருடம், இதுவரை 27 நான்கு சக்கர வாகன விபத்துகளில் சீட் பெல்ட் அணியாமல் சென்று விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5. இதில், 24 பேர் காயமடைந்துள்ளனர்.

சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, திருச்சி மாநகர காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின்மூலம் உயிரிழப்புகள் பெருமளவில் குறைந்துள்ளன. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சீட் பெல்ட் அணியும் முறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படியும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து சென்று விலைமதிப்பற்ற தங்கள் உயிர் பறிபோவதை தடுக்குமாறும், அதை தங்களது கடமையாகக் கருத வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க