வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (03/02/2018)

கடைசி தொடர்பு:16:09 (27/06/2018)

பார்வைக் குறையுடையோர், பார்வைக் குறையுடையோருக்காக நடத்தும் முதல் மின்னிதழ்! - புதுக்கோட்டையில் புது முயற்சி

பார்வைக் குறையுடைய ஆறு நபர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மின்னிதழ், தொடங்கிய ஒருவாரத்துக்குள்ளாக  பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருபவர், சரவண மணிகண்டன். அவர், தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் இணைந்து, கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி 'விரல்மொழியர்' என்ற ப்ரெய்லி மின்னிதழைத் தொடங்கியிருக்கிறார். பார்வைக் குறையுடையோருக்காக பார்வைக் குறையுடையோரால் நடத்தப்படும் முதல் இணையதளம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்த இதழில் தலையங்கம், கவிதை, பருவ இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் பற்றிய விமர்சனம், பார்வைக் குறையுடையோருக்காக வர்த்தக உலகில் வரும் புதிய கண்டுபிடிப்புகள், வசதிகள் என்று ஏராளமான உள்ளடக்கங்களுடன்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விசயங்களை ஆசிரியர் சரவண மணிகண்டன் விவரித்தார்.

சரவண மணிகண்டன்"பாடப் புத்தகங்கள் மட்டுமே ப்ரெய்லி வடிவில் கிடைக்கும் காலகட்டம் இருந்தது. அப்போது, பார்வைக் குறையுடை ஒருவர் தினசரிகள், வார, மாத இதழ்களை வாசிப்பதெல்லாம் பார்வையுள்ள ஒருவரின் உதவியின்றி நடைபெறாது. ஆனால், கணினி மற்றும் தொடுதிரை செல்பேசிகள் வரவுக்குப் பிறகு, பார்வைக்குறையுடைய நாங்களும், பார்வையுள்ளவர்களுக்கு இணையாகப் பல்வேறு இணையதளங்களில் பல்வேறு விதமான தகவல்களைப் படிக்க முடிகிறது. இதைச் சாத்தியமாக்கியவை ஜாஸ் (JAWS) மற்றும் என்.வி.டி.ஏ. (NVDA) போன்ற திரைவாசிப்பான்கள் (Screen-Readers).

மேற்கண்ட திரைவாசிப்பான்கள், ஒருங்குறி (Unicode) எழுத்துகளை மட்டுமே படிக்கும். பெரும்பாலான தினசரி, வார, மாத இதழ்களுக்கான வலைதளங்கள், ஒருங்குறி வடிவில் (Unicode) வடிவமைக்கப்பட்டிருந்தாலும், சந்தா செலுத்திப் படிக்கப்படும் தினசரிகள் (E-Paper), வார இதழ்கள் (E-Magazines), படங்கள் (image) உள்ளிட்டவை, பி.டி.எஃப் (PDF) வடிவிலேயே இருப்பதால் எங்களால் சமகால எழுத்துகளை உடனுக்குடன் படிப்பது அரிது.

எங்களின் இத்தகைய கையறுநிலையைப் போக்கி, தங்களது இதழ்களை ஒருங்குறி முறையில் வடிவமைத்து, எங்களின் பரந்த வாசிப்புக்குப் பெரிதும் துணை நிற்கும் செய்தி நிறுவனங்கள் தமிழகத்தில் இரண்டு. ஒன்று, நாங்கள் பெரிதும் மதிக்கும் விகடன் குழுமம், மற்றொன்று தி இந்து குழுமம்.
குறிப்பாக, விகடனிலிருந்து வெளிவரும் அனைத்து வார, மாத இதழ்களை நாங்கள் இணையத்தில் சந்தா செலுத்தி, விகடனின் வளைதளத்திலும், விகடனின் செல்போன் செயலியிலும் படித்துவருகிறோம்.

அதோடு மட்டுமல்லாமல், விகடன் பிரசுரத்தால் வெளியிடப்படும் பல்வேறு மின்னூல்களையும் (E-Books) வாங்கிப் படிக்கிறோம்.
இத்தகைய தொடர்வாசிப்பினால் உந்துதல் ஏற்பட்டு, வெறும் படிப்பவர்களாய் இருந்த நாங்கள் சமூகவளைதளங்களில் கணக்குத் தொடங்கி எழுதிவருகிறோம். அப்படி பல்வேறு தளங்களில் இயங்கிவரும் 6 பார்வையற்ற இளைஞர்கள் ஒருங்கிணைந்து, நாங்கள் புரிந்துகொண்டதை இந்த உலகுக்கும், எங்களைப்பற்றி இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டிய சில நுட்பமான விஷயங்களை இந்த உலகுக்கும் உரைக்க, உரையாட நாங்கள் தொடங்கியிருக்கும் மின்னிதழ், 'விரல்மொழியர்.' எங்களின் இந்த முயற்சிக்கு அடித்தளம் அமைத்து, எப்போதும் தனது ஒவ்வொரு முயற்சியிலும் எங்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்லும் விகடனுக்கு இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறோம்"என்றார். இதழைப் பற்றித் தெரிந்துகொள்ள;
www.viralmozhiyar.weebly.com என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.