வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (03/02/2018)

கடைசி தொடர்பு:12:50 (03/02/2018)

அப்போ மழை வெள்ளம்; இப்போ தீ! - மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்துக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று இரவு ஏற்பட்ட தீயைப் பெரும் பரபரப்புக்கிடையில் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் இரவு முழுவதும் அங்கிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும், பொதுமக்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின்மீது கோபத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.

மதுரை


நம்மிடம் பேசிய பொதுமக்களும் பக்தர்களும், ''தி.மு.க., அ.தி.மு.க. என ஆட்சி மாறிமாறி வந்தாலும், 15 வருடங்களாகத்  தக்கார் பதவியை விடாமல் வைத்துக்கொண்டு, பொதுமக்களையும் பக்தர்களையும் சந்திக்காமல் கம்பெனி முதலாளிபோல நடந்துகொள்ளும் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் முதலில் பதவி விலக வேண்டும்.கோயிலில் நடைபெறும் மோசடிகள், பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கேட்காத ஒரு தக்கார் தேவையில்லை. அடுத்து, ஜே.சி. நடராஜன்  யாருடைய புகாரையும் கேட்பதில்லை. கோயிலை மழையிலிருந்தும் காப்பாற்ற முடியவில்லை, நெருப்பிலிருந்தும் காப்பாற்ற முடியவில்லை. பல கோடி வருமானம் வருகின்ற கோயிலில் தீ அணைக்கும் கருவிகூட இல்லை. எப்படியோ தவறான தகவல்களைக் கூறி, மத்திய அரசிடமிருந்து தூய்மைக்கான விருதை வாங்கிவிட்டார்கள். ஒட்டுமொத்த கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் இடம் மாற்றம் செய்ய வேண்டும். இதைவிடக் கொடுமை, நேற்று தீயை அணைக்க வந்த வண்டியில் தண்ணீரே இல்லை'' என்று கோயில் நிர்வாகத்தின் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் பக்தர்கள் புகார் எழுப்பிவருகின்றனர். மேலும், கோயிலில் தீப்பிடித்ததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நல்லதல்ல என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில், கோயில் நிர்வாகத்தை எதிர்த்து, இந்து அமைப்பினர் இன்று (3.2.2018) காலை கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க