திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாளை தை உத்திர வருஷாபிஷேகம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை உத்திர வருசாபிஷேகம் நாளை (4.2.2018) நடைபெறுகிறது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற இருக்கும் புஷ்பாஞ்சலி பூஜைக்கு பக்தர்கள் பூக்கள் வழங்கலாம் எனத் திருக்கோயில் இணை ஆணையர் பாரதி தெரிவித்துள்ளார்.

trichendur subramaniya swamy temple

முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இக்கோயிலின் மூலவரான சுப்பிரமணிய சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது தை மாதம் உத்திர நட்சத்திரத்தில்தான். எனவே, ஒவ்வொரு வருடமும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று வருசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தை உத்திர வருசாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

வருசாபிஷேகத்தை முன்னிட்டு நாளை அதிகாலை  3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும்,  4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, கும்பகலச பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கும்ப கலசங்கள் விமானதளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேளதாளம் முழங்க விமானக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மூலவர் சுவாமி சுப்பிரமணியருக்கு 21 வகை அபிஷேகங்கள் மற்றும் கும்ப கலச அபிஷேகங்கள் நடக்கின்றன. பின்னர், விஷேச அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.வருசாபிசேகத்தை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்குப் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. தொடர்ந்து, உற்சவமூர்த்தியான சுவாமி குமரவிடங்கப் பெருமாள் தெய்வயானை அம்பாளுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வருதல்  நடைபெறுகிறது. 

சுவாமி சுப்பிரமணியருக்கு நடைபெற இருக்கும் புஷ்பாஞ்சலி பூஜைக்கு பக்தர்கள் மல்லி, பிச்சி, தாமரை, ரோஜா, அரளி, செவ்வந்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து, வாடாமல்லி, சம்மங்கி ஆகிய வாசனை கமழும்  பூக்களைக் கோயில் உள்துறை அலுவலகத்தில் மதியம் 2 மணிக்குள் வழங்கலாம். பக்தர்கள் வழங்கும் பூக்களில் ”செண்டு எனப்படும் கேந்தி பூ” மட்டும் தவிர்க்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என திருக்கோயில் இணை ஆணையர் பாரதி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!