வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (03/02/2018)

கடைசி தொடர்பு:13:50 (03/02/2018)

தங்கக்கட்டிகளை வாங்க வந்த ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சி! - அலெர்ட் போலீஸால் வடமாநிலத்தவர் சிக்கினர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தங்கக்கட்டிகள் வாங்க வந்த முன்னாள் ராணுவ வீரரை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்ற முயன்றபோது போலீஸிடம் சிக்கினர்.   

gold

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக்கட்டிகள் கைமாறுவதாக வந்த தகவலால், பூக்கடை போலீஸார் உஷாரானார்கள். உடனடியாக போலீஸ் டீம் அங்கு விரைந்தது. போலீஸைப் பார்த்ததும் பயணிகள் கூட்டத்தில் ஒருவர், தலைதெறிக்க ஓடினார். இன்னொருவர், போலீஸிடம் சிக்கிக்கொண்டார். யார் அவர்கள் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர்தான், பூக்கடை போலீஸ் நிலையத்துக்குத் தகவல்கொடுத்தவர். இதனால், அவரிடமே போலீஸார் முதலில் விசாரித்தனர். 'சார், நான் முன்னாள் ராணுவ வீரர். தற்போது தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலைபார்க்கிறேன். சில தினங்களுக்கு முன்பு, என்னுடைய போன் நம்பருக்கு ஒர் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தன்னிடம் தங்கக்கட்டிகள் இருப்பதாகவும், அதைக் குறைந்த விலைக்கு விற்க உள்ளதாகவும் தெரிவித்தார். தங்கக்கட்டிகளை வாங்க சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு என்னை வரும்படி தெரிவித்தார்.  அதனால், அங்கு வந்தேன். அப்போது, இரண்டு பேர் அங்கு நின்றனர். அவர்கள் என்னிடம் தங்கக்கட்டி என்று கூறி பார்சல் ஒன்றைக் கொடுத்தனர். அதைப் பிரித்துப்பார்த்தபோது எனக்குச் சந்தேகம் வந்தது. இதனால்தான் போலீஸுக்குத் தகவல்கொடுத்தேன்" என்று கூறினார் முருகதாஸ். 

gold
 

இதையடுத்து, போலீஸிடம் சிக்கிய நபரிடம் விசாரித்தனர். அவரது பெயர் ஜார்ஜத். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தங்கக்கட்டிகள் என்று கூறி பித்தளைமீது தங்கமுலாம் பூசி, விற்பனை செய்தது தெரிந்தது. ஜார்ஜத்துடன் வந்த நபரை போலீஸார் தேடிவருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. விசாரணை முடிவில் ஜார்ஜத் யாரையெல்லாம் ஏமாற்றினார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.