' எடப்பாடியும் பன்னீர்செல்வமும் துரோகிகள்!' - சீறும் சிங்காநல்லூர் சின்னச்சாமி | Former admk mla chinnasamy anger on his party decision

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (03/02/2018)

கடைசி தொடர்பு:15:08 (03/02/2018)

' எடப்பாடியும் பன்னீர்செல்வமும் துரோகிகள்!' - சீறும் சிங்காநல்லூர் சின்னச்சாமி

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

ண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார், சின்னச்சாமி. ' என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு நீக்கியிருக்கலாம். எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் துரோகம் செய்துவிட்டனர்' எனக் கொந்தளிக்கிறார், சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான சின்னச்சாமி. 

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நேற்று, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், ' அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஆர்.சின்னச்சாமி விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, பேரவையின் பணிகளைக் கவனிக்க, புதிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில்,கோவை மாவட்ட முன்னாள் எம்.பி., யூ.ஆர்.கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம.ராசு மற்றும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் கா.சங்கரதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தொழிற்சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தின்போது, எம்.எல்.ஏ., தாடி.ம.ராசு, சின்னச்சாமி ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டுவந்ததால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பேரவைச் செயலாளர் பதவியிலிருந்து சின்னச்சாமி நீக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. 

சின்னச்சாமியிடம் பேசினோம். 

பேரவைச் செயலாளர் பதவியிலிருந்து உங்களை நீக்கியதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

சின்னச்சாமி"அவர்கள் என்னைக் கேட்காமலேயே பதவியிலிருந்து நீக்கிவிட்டனர். அவர்கள், என்னிடம் ஏதாவது விளக்கம் கேட்டு, நான் பதிலளித்து நீக்கியிருந்தால் பரவாயில்லை. நேற்று காலை 11 மணி வரை பன்னீர்செல்வத்துடன் நல்லமுறையில் பேசிக்கொண்டிருந்தேன். எனக்குக் கைகொடுத்து அனுப்பிவைத்தார். மாலையில் பார்த்தால், டி.வி-யில் அறிவிப்பு வருகிறது. இவர்களை எப்படி நம்புவது? நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்."

'பன்னீர்செல்வம் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்' என்கிறீர்களா? 

" இருவரையும் நம்பிக்கைத் துரோகிகள் என்றுதான் சொல்கிறேன். என்னைக் கேட்காமல் நீக்கியது நம்பிக்கைத் துரோகம்தான். நீக்கப்படுவதற்கு என்ன காரணம்? என்மீது என்ன புகார் வந்தது எனச் சொல்லியிருக்க வேண்டும் அல்லது எழுத்துபூர்வமாக விளக்கம் கேட்டிருக்க வேண்டும். பத்து ஆண்டுகளாக அம்மா கொடுத்த பதவியில் இருந்துவந்தேன். என்னிடம் கேட்காமலேயே நீக்கிய இவர்களைத் துரோகிகள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?"

நீங்களும் தாடி.ம.ராசுவும் தனித்தனியாகச் செயல்பட்டுவந்ததால்தான் நீக்கியதாகத் தகவல் வெளியானதே? 

" அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை."

' அம்மாவால் கட்சிப் பதவிக்கு வந்தவர்களை ஒருபோதும் நீக்க மாட்டோம்' என இணைப்பு முயற்சியின்போது பன்னீர்செல்வம் கூறினார். இப்போது உங்களை நீக்கியது ஏன்? 

" அதைத்தான் துரோகம் என்கிறேன்". 

உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? 

" அதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல மாட்டேன். நான், மிகுந்த சங்கடத்தில் இருக்கிறேன். நானே விலகுவதாகத்தான் இருந்தேன். இவர்களுடன் இணைந்து பணி செய்ய எனக்கு விருப்பமில்லை. ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தேன். என்னைக் கேட்காமல் இவர்களாகவே முடிவை அறிவித்துவிட்டார்கள். தொழிலாளிகளுக்கு ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இவர்கள் எதையுமே தீர்ப்பதில்லை. ஒரு வார்த்தை கேட்டிருந்தால், நானே எழுதிக் கொடுத்திருப்பேன். இந்த ஆட்சியைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. விரைவில் என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்."
 


டிரெண்டிங் @ விகடன்