டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லையா? - தேர்வாணையம் புது அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்  4-ல் அடங்கிய பணிகளுக்கான 9,351 காலிப் பணி இடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான எழுத்துத் தேர்வை 11.2.18 அன்று 301 மையங்களில் நடத்துகிறது. இத்தேர்வுக்காக, 20 லட்சத்து 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விவரங்களைப் பதிவுசெய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு, தேர்வாணையத்தின் இணையதளமான  www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவுஎண், பயனாளர் குறியோடு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடுசெய்து, நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவுசெய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு (செல்லான்) நகலுடன், ''விண்ணப்பத்தாரர் பெயர், விண்ணப்பப் பதிவுஎண், விண்ணப்ப / தேர்வுக் கட்டணம், செலுத்திய இடம் அஞ்சலகம் / வங்கி, வங்கிக் கிளை / அஞ்சலக முகவரி, பணம் செலுத்தியதற்கான ஐடி மற்றும் தேதி' ஆகியவற்றை தேர்வாணையத்தின் contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு 6.2.18 -ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், 1800 425, 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்'' என்று கூறியுள்ளார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!