’’ஹைட்ராலிக் லிஃப்ட்; நவீன டாய்லெட்!’’ - எப்படி நடக்கிறது தினகரனின் புரட்சிப் பயணம்? | TTV Dinakaran starts people meeting programme in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/02/2018)

கடைசி தொடர்பு:16:00 (03/02/2018)

’’ஹைட்ராலிக் லிஃப்ட்; நவீன டாய்லெட்!’’ - எப்படி நடக்கிறது தினகரனின் புரட்சிப் பயணம்?

’மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்கிற பெயரில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவான டி.டி.வி.தினகரன் தொடங்கியுள்ளார்.  


ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த தினகரன், அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். 'மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்' என்ற பெயரில், கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தில் நேற்று (2.2.2018)  அவர் தொடங்கினார். தஞ்சை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் 5-ம் தேதி வரை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் தினகரன், ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், 10-ம் தேதி மீண்டும் தனது பயணத்தைத் தொடங்க இருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் வரும் 13-ம் தேதிக்குள் சுற்றுப்பயணத்தை அவர் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்துக்காக, 9936 எண் கொண்ட ஃபோர்ஸ் நிறுவனத்தின் டெம்ப்போ டிராவலர் வாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட அந்த வாகனம், ஹைட்ராலில் லிஃப்ட், நவீன டாய்லெட், உணவு வகைகளைப் பாதுகாக்க கூலர் மற்றும் உணவுப் பொருள்களின் சூட்டைத் தக்கவைக்கும் பொருட்டு ஹாட் பாக்ஸ் என அதிநவீன வசதிகளுடன் தயாராகியிருக்கிறது. 4 பேர் அமரும் வகையில், இருக்கைகளுடன் ஏ.சி வசதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தைப் பராமரிப்பதற்காகவே 3 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.  

பேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவு தினம் இன்று (3.2.2018) அனுசரிக்கப்படுவதால், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘’நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் வரும். தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அந்தக் கட்சிக்கும் குக்கர் சின்னத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகிவருகின்றன. இந்தச் சூழலில், கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்க தமிழக முதல்வர் நேரம் கேட்டுள்ளார். இது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் கையாலாகாத தனம். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இது, மிகப் பெரிய ஏமாற்றம்’ என்றார். இன்றைய சுற்றுப்பயணத்தை, கும்பகோணம் சுவாமிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் தொடங்க இருக்கிறார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close