வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (03/02/2018)

கடைசி தொடர்பு:16:20 (03/02/2018)

குறிவைத்தது நகைக் கொள்ளைக்கு; சிக்கியது மணல் கொள்ளை! - யூ டர்ன் அடித்து சிக்கிய டிரைவர்

கொள்ளை

மதுரை சோழவந்தானை அடுத்த பசும்பொன் நகரைச் சார்ந்தவர், சசிக்குமார். 35 வயதான இவர், அபுதாபியில் வெல்டிங் ஒர்க்ஸ் பணி செய்துவருகிறார் . இந்நிலையில், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்த அவர் , அவரது மனைவி மற்றும் தாயுடன் மேட்டுப்பட்டி தெத்தூரில் உள்ள உறவினர் வீட்டு விழாவுக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு திரும்பிவந்து பார்க்கும்போது, அவரது வீட்டு இரும்புக் கதவு உடைக்கப்பட்டநிலையில் இருந்துள்ளது . உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 35 பவுன் நகை மாயமானது தெரிந்தது.

இது தொடர்பாக சோழவந்தான் காவல்நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டு, நகைக் கொள்ளையர்களைப் பிடிக்க சசிக்குமார் வீட்டின் அருகே காவல்துறையினர் ஆய்வுசெய்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மணல் லாரியும் வந்துள்ளது. காவல்துறையினரைப் பார்த்ததும் மணல் லாரி ஓட்டிவந்த நபர் லாரியை யூ டர்ன் அடித்து திருப்பியபோது, சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த லாரியை மடக்கிப்பிடித்து விசாரித்துள்ளனர். அவர்களை ஆய்வுசெய்ததில், அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்துள்ளது . மேலும், அவர்கள் உசிலம்பட்டியை அடுத்த சின்னமருது மற்றும் பிரபு எனத் தெரியவந்ததோடு, அவர்கள் திண்டுக்கல் பகுதியில் வைகை ஆற்றில் மணல் திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது .