வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (03/02/2018)

ஊழல் புகாரில் அடுத்தடுத்து கைதாகும் துணைவேந்தர்கள்!  - கடிவாளம் போட்ட கவர்னர்

பேராசிரியர் பணியிடத்துக்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.

VC

கணபதி சிக்கியதன் பின்னணி இப்போது வெளியாகியிருக்கிறது. கணபதிமீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் இருந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதில் ஏராளமாக இவர் லஞ்சம் வாங்கிக் குவித்துள்ளார். இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. அவர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டிருந்தது. 

பல்கலைக்கழகத்தில் கணபதியின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பது, விசாரணை நடத்துவது என லஞ்ச ஒழிப்புத்துறை மும்முரம் காட்டி வந்தது. கணபதியைக் கண்காணிக்க 2 ஆண்டுகளுக்கு முன்னரே லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கணபதியை நிழல்போல் பின்தொடர்ந்துகொண்டிருந்தது. பல்கலைக்கழகத்திலிருந்து சிலரும் கணபதிக்கு எதிரான ஆதாரங்களைக் கொடுத்துள்ளனர். அவை போதுமான அளவுக்கு இல்லாததால் உறுதியான ஆதாரம் கிடைப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொறிவைத்துக் காத்திருந்தனர். இது எல்லாம் தெரிந்தும் மீண்டும் சுரேஷிடம் கைநீட்டத் துணிந்திருக்கிறார் கணபதி.

UNIபேராசிரியர் பணிக்கு சுரேஷிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார், கணபதி. அதில் ஒரு லட்சத்தை மட்டும் அளித்துள்ளார். அத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவலும் கொடுத்துள்ளார். இதற்கிடையே, மீதிப்பணத்தை கணபதி கேட்டு நச்சரித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்பாட்டின்படி, மீதிப் பணத்தைக் காசோலையாகக் கொடுக்க சுரேஷ் இன்று சென்றார். இதுதான் தருணமெனக் காத்திருத்த லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாகப்பிடித்து கணபதிக்குக் காப்புக் கட்டியிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கணபதி ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே சசிகலாவால் நியமனம் செய்யப்பட்டவர் என்ற தகவல் உண்டு. அவர்மீது புகார்கள் பறக்கத் தொடங்கியதும், உள்ளூர் அமைச்சர்களிடமும் அவர்மீது புகார் பட்டியல் வாசிக்கப்பட்டது. கணபதியைக் கைது செய்வதற்கு முன்னரேயே, கவர்னர், உயர்கல்வித்துறை ஆகியோரின் அனுமதியை லஞ்ச ஒழிப்புத்துறை பெற்றுள்ளது. கணபதி மீதான புகார்கள் அதிகரித்ததால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதற்கு உடனே இசைவளித்ததாகக் கூறப்படுகிறது. 

Prohit


தமிழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் லஞ்சப்புகாரில் கைதாவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கோவை அண்ணாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் 2006-ம் ஆண்டு லஞ்சப்புகாரில் கைதாகி இருந்தார்.