வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (03/02/2018)

கடைசி தொடர்பு:17:32 (03/02/2018)

விரைவில்... மிக விரைவில்...ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை!

ஹார்வர்டு பல்கலைக்கழகம்

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ' வரும் ஜூன் மாதத்துக்குள் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்துவிடும். இதன்பிறகு பல்கலைக்கழகத்துடன் போடப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்களின் தொன்மை வரலாறு குறித்து ஆய்வு நடத்தப்பட இருக்கிறது" என்கிறார் தமிழ் இருக்கை ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென தனியாக இருக்கை அமைக்கும் முயற்சியில் உலகத் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மொழி குறித்த ஆய்வுகளை நடத்த இருக்கை அமைய வேண்டும் என்றால், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியை அளிக்க வேண்டும். இதற்காக, அமெரிக்கவாழ் தமிழர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன் உள்ளிட்டோர் தலா 5 லட்சம் டாலர்களைக் கொடுத்து இந்தப் பணியைத் தொடங்கிவைத்தனர். இதன்பிறகு உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் அமைப்புகளும் நிதியை வாரி வழங்கினர். மொய் விருந்து, இசைக் கச்சேரி எனப் பல்வேறு வடிவங்களில் நிதியைத் திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருகட்டத்தில், தமிழக அரசும் பத்துக் கோடி ரூபாய் நிதியை அளித்தது. 

அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் ஏற்கெனவே அளித்த இரண்டரை லட்ச ரூபாயுடன் மேலும் ரூ.25 லட்சம் சேர்த்து நன்கொடை அளித்தார். தமிழ் இருக்கைக்காக இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்த பாலச்சந்திரனை, கலை மற்றும் அறிவியல் புலம் சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிரசிடென்ட்ஸ் அசோசியேட்ஸ் (President's associates) என்ற அங்கீகாரத்தை அளித்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிரபலமான முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கென 25,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டுமே இந்தக் கௌரவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 50 ஆயிரம் டாலர்களுக்கும் மேல் அதிகமாக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் 15 பேருக்கும் குறைவாக இருப்பதால், கூடுதலாக ஒன்பதாயிரம் டாலர்களைக் கொடுத்து இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இவர் இந்தியாவிலிருந்து நிதியளித்த தனிநபர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 

பாலச்சந்திரன்தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பாலச்சந்திரனிடம் பேசினோம். " ஹார்வர்டில்  இருக்கை அமைய இன்னும் ஏறக்குறைய 3 லட்சம் டாலர்கள் தேவைப்படுகின்றன. இதில், நேரடியாக பல்கலைக்கழகத்துக்குப் பணத்தை அனுப்புபவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கணக்கை மாதத்துக்கு ஒருமுறைதான் ஹார்வர்டு எங்களுக்கு அனுப்புகிறது. இதில் சிலர், 'ஹார்வர்டு தமிழ் இருக்கை' எனக் குறிப்பிடாமல் அனுப்பிவிடுவதால், அதனைப் பொதுக் கணக்கில் சேர்த்துவிடுகின்றனர். இந்த வகையில் மட்டும் 23 ஆயிரத்து 500 டாலர்கள் கணக்கில் வராமல் இருந்தன. எந்த வங்கியின் மூலமாகப் பணத்தை அனுப்பினார்கள் என்ற தகவலை அளித்து, அந்தப் பணத்தை தமிழ் இருக்கை கணக்கில் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அப்படிப் பார்த்தால், மூன்று லட்சம் டாலர் தேவை என்பது இரண்டு லட்சம் டாலராகக் குறைய வாய்ப்பிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஏறக்குறைய 2 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. வரும் ஜூன் மாதத்துக்குள் பணத்தைக் கொடுத்துவிடும் முடிவில் இருக்கிறோம். இதன்பிறகு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறது. 

தமிழ் மொழி குறித்த ஆய்வில் நாம் எதைச் சொல்கிறோமோ, அதன் அடிப்படையில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வுகளை நடத்தும். 'சங்க இலக்கியத்தை ஆய்வதற்காக இந்த இருக்கை அமைக்கப்பட வேண்டும்' என நினைத்தோம். ஆனால், இப்போது பல்வேறு இடங்களிலிருந்து வந்த கருத்துகளைப் பரிசீலிக்கும்போது, சங்க இலக்கியம் மற்றும் தமிழின் தொன்மை, வளமை, பழங்கால வாழ்வின் பண்பாட்டுச் செழுமை ஆகிய இரண்டையும் வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. சங்ககால நூல்கள், தொல்காப்பியம் உள்ளிட்டவை எந்த ஆண்டில் எழுதப்பட்டவை என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. கீழடியில் நடந்த அகழாய்வின் மூலம், ' சங்க இலக்கியங்கள் விளக்குகின்ற தமிழர் நாகரிகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது' என்று மிக ஆதாரமான செய்தி கிடைத்திருக்கிறது. மேலும், தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, ரோமில் இருந்த ஒரு பொருளாதார நிபுணர், ' தமிழரிடம் நாம் வாங்கும் மயில் தோகை, அரிசி, மிளகு ஆகியவற்றை நிறுத்திவிட்டால்தான் ரோமின் பொருளாதாரம் சரியாமல் இருக்கும்' என்று கூறும் அளவுக்கு நாம் அங்கு சென்று வியாபாரம் செய்திருக்கிறோம். 'இலக்கியம், கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி மற்றும் கடல் வாணிபம் ஆகிய நான்கின் அடிப்படையில் ஓர் இனத்தின் தொன்மையையும் வளமையையும் கண்டறிய முடியும் என்பதால் அதன் அடிப்படையில் ஆய்வு நடத்த வேண்டும்' என்ற கருத்துகளும் எங்களுக்கு வந்திருக்கின்றன. இதனையொட்டி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருக்கிறது. ஜூன் மாதத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான நகலை வழங்கும் முடிவில் இருக்கிறோம். இதன்பிறகு அதிகாரபூர்வமாக தமிழ் இருக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்றார் மகிழ்ச்சியோடு. 
 


டிரெண்டிங் @ விகடன்