வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (03/02/2018)

"வாழ்நாள் முழுவதும் கற்போரை உருவாக்குவோம்!" - ஆசிரியர்களுக்கு அறிவுரை


 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இன்று ஆசிரியர்களுக்குத் தொடக்கக் கல்வியில் புதிய கற்றல் முறை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் அன்னவாசல் ஒன்றியம் கல்வி வட்டத்துக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பயிற்சியினை தொடங்கி வைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னழகு பேசினார். "அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும், 'மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்' ஆகிய இரண்டும் இணைந்து, 2017-2018 -ம் கல்வி ஆண்டில் சில புதிய முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதாவது, இரண்டாவது பருவ கடைசிப் பாடத்திட்டத்தினை மாதிரியாகக் கொண்டு, தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் புதிய கற்கும் முறையை இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு வடிவமைத்திருக்கிறது. இம்முறையில், மொத்தக் கல்வி பயிற்றுவிக்கும் நாள்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் தனித்தனி அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு பாடவேளையானது பாடம் முடிக்கப்பட்டவுடன் மதிப்பீடு செய்யப்படும். இதற்கென்று தனியாக கால அட்டவணையும் பின்பற்றப்பட உள்ளது. இந்தச் சிறப்பு மிக்க புதிய கற்றல் முறையை அமல் படுத்துவதற்கு நமது அன்னவாசல் வட்டார வளமையத்தில், தமிழ்வழி பள்ளியாக சித்தன்னவாசல் பள்ளியும் ஆங்கில வழி பள்ளியாக மேலூர் பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தெரிவு செய்யப்பட்ட இந்த இரு பள்ளிகளுக்கும் பாடப்புத்தகம் மற்றும் பயிற்சியேடும் தனித்தனியே வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் வகுப்பிற்கு ஆசிரியர் கையேடு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சியின் நோக்கமானது கற்போரை உருவாக்குதல். அதாவது, வாழ்நாள் முழுவதும் கற்பவராக உருவாக்குதல் என்பதுதான்" என்றார். இந்தப் பயிற்சியின் கருத்தாளர்களாக தாராபேகம், ரம்யா, சுஜாமெர்லின் ஆகியோர் செயல்பட்டு ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட துறை சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர்.