'தேர்தல் வரப்போகுது... எச்சரிக்கையாக இருங்க' - நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் அட்வைஸ் | Election - O.Paneerselvam warns his cadres

வெளியிடப்பட்ட நேரம்: 07:12 (04/02/2018)

கடைசி தொடர்பு:07:12 (04/02/2018)

'தேர்தல் வரப்போகுது... எச்சரிக்கையாக இருங்க' - நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் அட்வைஸ்

இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் அ.தி.மு.க. நிர்வாகிகள் உஷாராக இருப்பதோடு தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

 அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சில அட்வைஸ்களைக் கொடுத்துள்ளனர். 
இதுகுறித்து மாவட்டச் செயலாளர்கள் சிலர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து தேர்தல்கள் வரவுள்ளன. இதனால் தேர்தல் பணிகளுக்கு ஒவ்வொருவரும் இப்போதே தயாராகுங்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கட்சித் தலைமை ஆய்வு செய்துவருகிறது. இனிவரும் காலங்களில் எந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியடைக் கூடாது.

 ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று அதை அவரது காலடியில் சமர்பிக்க வேண்டும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்கானப் பணிகளை இப்போதே நிர்வாகிகள் தொடங்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலும் வரலாம். அதை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

 ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தில் இன்னும் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும். 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன் லைன் மூலமாகத்தான் உறுப்பினர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இதனால் டபுள் என்ட்ரிகள் வரவாய்ப்பு இருக்காது. அதோடு உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு போல உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அதைக் கவனத்தில் கொண்டு கட்சியினர் செயல்பட வேண்டும். 
கட்சிக்கு துரோகம் செய்த தினகரனின் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கப்பட்டுவருகின்றனர். அந்தப் பதவிகளுக்கு விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

முதல்கட்டமாக தினகரன் ஆதரவாளராக இருந்த 6 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளன. அந்தப் பதவிகள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. தினகரன் ஆதரவாளர்களுடன் யாரும் ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தினகரனுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பது ஆதாரபூர்வமாக கட்சித் தலைமைக்குத் தெரியவந்தால் அவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஏன், சம்பந்தப்பட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதிக உறுப்பினர்கள் சேர்ப்பவர்களையும், கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களைப் பதவிகள் தேடிவரும். தினகரன் நடத்தும் கூட்டத்துக்குப் போட்டியாக உடனடியாகக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது" என்றனர்.  

 தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டு அந்தப் பதவிகளுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கபடவுள்ளனர். அந்தப் பதவியைப் பெற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதில், 4 மாவட்டச் செயலாளர் பதவிகளைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காயை நகர்த்தியுள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு மூன்று மாவட்டச் செயலாளர் பதவியைக் கேட்பதால் சிக்கல் எழுந்தது. இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு 4 பதவிகளும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு 2 பதவிகளும் என முடிவாகியுள்ளதாக கட்சியின் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.    


.


டிரெண்டிங் @ விகடன்