வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (03/02/2018)

கடைசி தொடர்பு:18:30 (03/02/2018)

’நல்ல மூச்சுக்காத்து கிடைக்குமா?’ - எரியும் குப்பை; திணறும் கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் 'நல்ல மூச்சுக்காத்து எப்போது கிடைக்கும்' என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

burning
 

சாத்தான்குளம் வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் மகா.பால்துரை இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், ‘‘பொருளாதாரத்திலும் கல்வியிலும் தன்னிறைவு பெற்ற மனிதர்களுக்கும் கிராமங்களுக்குமே விடுதலையின் பலன்! ஏனையோர் வெந்ததைத் தின்று விதிவந்தால் மாள்வோம் என விரக்தியில் வெதும்பிப் போய் உள்ளனர். இங்கும் அதே நிலையே தொடர்கிறது. சாத்தான்குளத்திலிருந்து 3கி.மீ. வடக்கே நெல்லை செல்லும் முதன்மைச் சாலை அருகே அமைந்துள்ள அமைதியான கிராமம். MGR நகர் எனும் வள்ளியம்மாள் புரம். ‘பன்னம்பாறை விலக்கு’ என்றும் இதனைக் குறிப்பிடுவார்கள்.

சாத்தான்குளம்
 

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி என்பதாலோ என்னவோ, பேரூராட்சியிலிருந்து எடுத்து வரப்படும் குப்பை உள்பட பல்வேறு கழிவுகளும் இங்கேதான் சங்கமம் ஆகிறது.

ஊருக்கருகில் பேரூர் கழிவுகள் கொட்டப்பட்டால் சுகாதாரக்கேடு ஏற்படுமே என எண்ணினாலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இவ்வூர் மக்கள்! ஆனால்,கடந்த ஓராண்டாக மக்கள் முணுமுணுக்கத்.தொடங்கி விட்டனர். காரணம் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு இரவில் தீ வைக்கப்படுகிறது. தொடர்ந்து வாரம் ஒருமுறை நெருப்பு வைக்கப்படுவதால் தொடர்ந்து இரண்டு நாள்கள் புகைமூட்டம் நிலவுகிறது.
இந்தப் பகுதியைப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடந்து செல்பவர்களுக்கே மூச்சு முட்டுகிறது என்றால் தினமும் புகையை சுவாசிக்கும் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்! மதுஅருந்துபவர்கள்தான் தீ வைத்து விடுகிறார்கள் என்றால், உள்ளூரிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தீயை அணைக்க வேண்டியது சாத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் கடமை அல்லவா?
அதே நேரத்தில், பேரூராட்சி நிர்வாகத்தினர்தான் குப்பைகளின் அளவைக் குறைக்க இவ்வாறு செய்கிறார்கள் என்றால் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது. புகையின் காரணமாக வள்ளியம்மாள் புரம் உள்பட 3 கி.மீட்டர் அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘பெருநகரங்களுக்கு மட்டும்தான் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் உண்டா? கிராமங்களின் சிரமங்களைக் கண்டு கொள்வதில்லையே ஏன்? “இந்தியாவின் ஆன்மா” கிராமங்கள் என்றார் தேசப்பிதா மகாத்மா. ஆனால்.இங்கு ஆன்மாவே மூச்சுத் திணறுகிறதே?

குப்பைகளை அறிவியல் முறையில் மக்கச் செய்வதை விடுத்து தீ வைத்து அழிப்பது ஏன்? ஏழைஎளிய பாட்டாளி மக்களின் மூச்சுக்காற்றை நிறுத்தி விடாதீர்!” என்றபடி ஆவேசமானார்.

உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் நடக்காததால், பேரூராட்சி தலைவரிடமோ, தங்கள் வார்டு கவுன்சிலரிடமோ சென்று தங்கள் பிரச்னைகளைக் கூறி தீர்வு பெறமுடியாமல் கிராம மக்கள் தவிக்கிறார்கள். அதிகாரிகளோ மக்களை அலட்சியப்படுத்துவதிலேயே முனைப்புடன் இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க