வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (03/02/2018)

காவிரி நீரைப் பெற புதிய வழக்கு! முதல்வர் பழனிசாமி அதிரடித் திட்டம்?

காவிரியில் தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரைத் தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தொடர தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரை கர்நாடகம் தரவில்லை. இதனால் டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்தின் பங்கைக் கேட்டுப்பெற வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்திக்க முதல்வர் பழனிசாமி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு கர்நாடக முதல்வர் தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அதேசமயம், கர்நாடகாவின் தேவைக்கான தண்ணீரே இருப்பு இல்லை. எனவே, தமிழகத்துக்கு இப்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

Siddha


இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. காவிரியில் தமிழகத்தின் பங்கை தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதிய வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. காவிரி தண்ணீர்ப் பிரச்னை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.