வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (03/02/2018)

கடைசி தொடர்பு:16:12 (12/07/2018)

கடல்வழியாக இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தல்!- 2 மீனவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் பீடி கட்டுகள் கடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள் இருவரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு போதை பொருள் கடத்திய மீனவர்கள் கைது

இந்தியா - இலங்கை இடையே வான் மற்றும் கடல் வழியாக தங்கக்கட்டிகள், போதைப்பொருள்கள், புகையிலை பொருள்கள், ரசாயனப் பவுடர் ஆகியன கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இலங்கையிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த 12.5 கிலோ எடை கொண்ட தங்கத்தை தலைமன்னார் கிராம கடற்கரை பகுதியில் இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே உள்ள ஆதம்பால கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான நிலையில் சென்ற நாட்டுப்படகு ஒன்றினை இலங்கைக் கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். இந்தச் சோதனையின் போது அந்த நாட்டுப்படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதைப் பவுடர் எனச் சந்தேகிக்க கூடிய 423 கிராம் எடை கொண்ட பவுடர் மற்றும் 157 பீடி கட்டுகளைக் கைபற்றினர்.

இதையடுத்து அந்த நாட்டுப்படகிலிருந்த ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நம்புச்செல்வம், கணேசன் ஆகிய இருவரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதன் பின்னர் மீனவர்கள் இருவரும் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.