மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் என்னாகும்...? - எச்சரிக்கும் திருமாவளவன்

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்குக் கடந்த 2015- ம் ஆண்டு டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் இதுவரை வழங்கப்படாததை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டித்திருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  பட்டியலை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக் குழு, மின்வாரியத்தலைவர்,மின்துறை அமைச்சர் ஆகியோரிடம் வழங்கியபிறகும், ஊதிய உயர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்க, மின்வாரியமும், தமிழக அரசும் தாமதப்படுத்துகின்றன. கடந்த  அக்டோபரிலிருந்து தொழிற்சங்கங்களும், ஊதிய உயர்வுக் குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

மின்வாரிய

21-10-2017அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வுக்கணக்கீட்டுக் காரணிகள் 2.57 விழுக்காடு என மின்வாரியம் ஒத்துக்கொண்ட நிலையில், அதனை நிறைவேற்றுவதில் தமிழக அரசின் நிதித்துறை தயக்கம் காட்டுவதோடு, ஒத்துக்கொண்ட ஊதிய உயர்வுக்காரணியை நிராகரித்ததாக தெரியவருகிறது. ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வில் தமிழக அரசின்   அலட்சியப்போக்கால், திடீரென போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள். அதுபோல  மின்வாரிய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தமிழக மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கடந்த 23-1-2018 அன்று வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில்,தொழிலாளர்நல ஆணையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக  அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அப்பேச்சுவார்தையில் மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வரும் 12-2-2018-க்குள் முடிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசு காலம் தாழ்த்தாமல், மழை வெள்ளம் புயல் இயற்கைப் பேரிடர் காலங்களில் உயிரை துச்சமென நினைத்து பணியில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையையும் உடனே  வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!