“மிஸ் யூ அறிவு!”- ஜல்லிக்கட்டுக் காளைக்கு கிராமமே திரண்டுவந்து கண்ணீர் அஞ்சலி


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது மெய்வழிச்சாலை என்ற கிராமம். இங்கு வசிக்கும் சாலை சக்கரபாணி என்பவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர். இவர் ஐந்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருகிறார். அவருக்குச் சொந்தமான ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு. அந்தக் காளைகளை தனது வீட்டில் ஒருவராகவே பாவித்து வளர்த்து வருகின்றார். அவரது காளைகள் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிறாவயல் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கக்காசு, கட்டில், பீரோ, ஃபேன்  உள்ளிட்ட பரிசுப் பொருள்களைப் பெற்று வெற்றிக் காளைகளாக வலம் வந்தன. அதனால்,மெய்வழிச்சாலை கிராமத்தின் செல்லப்பிள்ளையாக சக்கரபாணியின் காளைகள் இருந்தன. இதில், சாலை சக்கரபாணிக்கு நெஞ்சுக் கொள்ளாத பெருமை இருக்கும்..காளைகளும் தன்னைச் சீண்டும் நபர்களிடம் முரட்டுக்காளையாகவும், பாசம் காட்டும் நபர்களிடம் பச்சைக்குழந்தையாகவும் பழகி வந்தன. மேலும், அந்த ஊருக்கும் பெருமைகளைச் சேர்த்துதந்தன.

 

 

இந்நிலையில், கடந்த வருடம் அவர் வளர்த்து வந்த காளைகளில் ஒன்றான'அறிவு' நோய்வாய்ப்பட்டது. கால்நடை சிறப்பு மருத்துவர்கள் பலகட்ட சிகிச்சை அளித்துப் பார்த்தார்கள். ஆனால், காளையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணமால் அந்த 'அறிவு' இறந்தது. செய்திக் கேட்டு, ஊர் மக்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மரணமடைந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மாவட்டத்திலிருந்து திரளான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அங்கம்பக்கம் கிராம மக்கள் எனப் பலரும் மாலைகள், பட்டுத் துண்டுகளுடன் வந்துவிட்டனர்.  'அறிவின் பிரிவைத் தாங்க முடியாமல் அனைவரும் கண்ணீர் வடித்து அஞ்சலி செய்தனர். பின்னர், காளையை சங்கரபாணியின் வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம்செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.


இன்று அறிவின் முதலாம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி, அதனை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த  ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடு பிடி வீரர்கள் கலந்துகொண்டு காளை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மனிதர்கள் இறந்து புதைத்தாலே அடுத்த நாளே மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க விரைந்தோடும் மனிதர்கள் நிரம்பிய இந்தக்காலத்தில்,ஒரு காளையின் இறப்பு தினத்தை நினைவில் வைத்து, அதற்கு நினைவஞ்சலி செலுத்தி மெய்வழிச்சாலை மக்கள் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!