பஞ்சாபில் 20 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை!- மாநில அரசு அதிரடி நடவடிக்கை

பஞ்சாப் மாநிலத்தில், மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய 20 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்திருக்கிறது. 

பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை

இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு உலகம் முழுவதும் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்தியாவிலும் இயற்கை வேளாண்மை பற்றிய புரிதல் ஏற்பட்டு வருவதால், மக்களுக்குக் கேடு விளைவிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருத்துப் பொருள்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துமாறு வேளாண் வல்லுநர்கள் விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த சில பூச்சிக்கொல்லிகளுக்கு அந்த மாநில அரசு அதிரடியாகத் தடை விதித்திருக்கிறது. 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமும், அந்த மாநிலத்தின் விவசாயிகள் ஆணையமும் குறிப்பிட்ட சில வேளாண் மருந்துப் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பதாக அரசுக்கு அறிக்கை அளித்தது. இதனைப் பரிசீலனை செய்த அந்த மாநில அரசு உடனடியாக 20 பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. 

கடந்த ஜனவரி 30-ம் தேதி பஞ்சாப் அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. அத்துடன், பிப்ரவரி 1-ம் தேதி முதல் அந்த மருந்துப் பொருள்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸை ரத்து செய்வதுடன், புதிய லைசென்ஸ் கொடுக்க வேண்டாம் என்றும் வேளாண்துறை இயக்குநருக்கு மாநில அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட மருந்துப் பொருள்களின் விற்பனை நடைபெறாமல் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டது. 

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பட்டியலில், போஸ்பாமிடான், டிரைகலரோஃபன், பென்ஃபுராகார்ப், டிகோஃபோல், மீத்தோமைல், தியோபனைட்மீத்தைல், எண்டோசல்ஃபான், பிஃப்பென்த்ரின், கார்போசல்ஃபான், குளோர்ஃபெனாபர், டாஸோமெட், டைஃப்ளூபென்சுரோன், ஃபெனிட்ரோத்ரின், மெட்டாடிஹைட், கசுகமைசீன், ஈதோஃபென்ப்ராக்ஸ், போரேட், ட்ரையசோபாஸ், அலச்லார், மோனோகுரோட்டபாஸ் ஆகிய மருந்துப் பொருள்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!