துணைவேந்தர் கணபதி வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்! | Vigilance police raid at Vice chancellor Ganapathi house

வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (04/02/2018)

கடைசி தொடர்பு:11:53 (04/02/2018)

துணைவேந்தர் கணபதி வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

லஞ்ச புகாரில் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் திருச்சியில் உள்ள அவரது வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 
துணைவேந்தர் கணபதி வீடு
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுரேஷிடம் 30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதனை துணைவேந்தர் கணபதி வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரைக் கையும், களவுமாக பிடித்துள்ளனர். 
 
இந்த விவகாரத்தில் துணைவேந்தர் கணபதிக்கு இடைத்தரகராக செயல்பட்ட, பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்டுள்ள கணபதியின் சொந்த ஊர் திருச்சி துறையூரை அடுத்த கோட்டாத்தூர்.  அந்த ஊரில் துணைவேந்தர் கணபதிக்கு, சிறிய வீடும், சுமார் 5 ஏக்கர் நிலமும் உள்ளது. மேலும்  அவருக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்து 35 வருடங்களாக பையோ டெக்னாலஜி பேராசிரியராகவும், அடுத்து தாவரவியல் துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 
 
இந்நிலையில் திருச்சியில் பணியாற்றியபோது, துணைவேந்தர் கணபதி, திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் இடம் வாங்கி, வீடு கட்டி வாழ்ந்து வந்தார். 
 
இவரின் மகன், மற்றும் மகள் இருவரும் மருத்துவர்கள். அவர்கள் தற்போது வெளிநாட்டுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் தனது மகள் திருச்சியில் தங்கி மருத்துவம் பார்க்க வசதியாக, தனது மகளுக்காக  அவரின் வீடு அருகில், மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறார் கணபதி. 
 
இந்நிலையில் கணபதி துணைவேந்தராக பதவி உயர்வு பெற்றபிறகு, அவரின் நவல்பட்டு வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அவ்வப்போது  கணபதி திருச்சி வந்தால், வீட்டில் தங்கிவிட்டுச் செல்வாராம். இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று இரவு வரை சோதனை நடத்தினர்.
துணைவேந்தர் கணபதி
நேற்று மாலை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் டி.எஸ்.பி ராமசந்திரன் தலைமையில் துணை வட்டாச்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் யோகராஜ், ஆகியோர் நவல்பட்டு அண்ணா நகர்  வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டியிருந்ததால் இதுகுறித்து கோவையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பிறகு இரவு 8 மணிக்கு மேல், கோவையில் இருந்து வரவழைக்கப்பட சாவியுடன், லஞ்ச ஒழிப்பு போலீஸார்  6 பேர் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர்.  சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்த இந்த சோதனையில் முக்கியமான சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.