வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (04/02/2018)

கடைசி தொடர்பு:13:55 (04/02/2018)

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது - சுப்பிரமணிய சாமி திட்டவட்டம்

`கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் காவிரிக்கு தண்ணீர் கிடைக்காது. தற்போதைய நிலையில் தண்ணீர் வேண்டுமா, அல்லது காவிரி ஆற்றுத்தண்ணீர்தான் வேண்டுமா என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்' என பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.   

நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெறும் இந்துசமய மாநாட்டில் கலந்துகொள்ள தூத்துக்குடி விமானநிலையம் வந்த சுப்பிரமணயன் சுவாமி செய்தியாளர்களிடம், `தமிழகத்தில் காவிரி ஆற்றில் குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் தண்ணீர் வேண்டும் என்றால், நான் தமிழக அரசிற்கு ஒரு யோசனை சொல்கிறேன். கடல் நீரில் உப்பை நீக்கி நன்னீராக்கி பயன்படுத்தலாம். இது நீண்டகால திட்டம் இல்லை. இது குறித்து முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு தெரியாவிட்டால் என்னிடம் பேசச் சொல்லுங்கள், அவர்களுக்கு விளக்கம் அளிக்கிறேன். அதோடு இஸ்ரேலில் இருந்து மிஷின்களை இறக்குமதி செய்து இத்திட்டத்தை 4 மாதத்தில் நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி காட்டுகிறேன். கர்நாடகாவில் இருந்துதான் தண்ணீர் வேண்டும் என பிடிவாதமாக இருந்தால் கிடைக்காது. தண்ணீர் வேண்டுமா அல்லது கர்நாடகாவில் இருந்துதான் தண்ணீர் வேண்டுமா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைய தமிழக அரசின் செயல்பாட்டை நான் கவனிப்பதே இல்லை.

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முறையான நிதி ஒதுக்கப்படவில்லை என அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் இந்த பட்ஜெட் தொடர்பான திருத்தம் வந்தபோது நாடாளுமன்றத்தில் ஏன் தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் எதுவும் வாய்திறக்கவில்லை. அப்போது இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என எனக்குத் தெரியவில்லை. பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர் விரைவில் சிறைக்குச் செல்வார்.

2 ஜி வழக்கில் 10 நாளில்  திரும்பவும் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் தனி ஒரு ஆளாக நின்று வெற்றி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஏற்கெனவே சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து தமிழகம் குட்டிச் சுவராகப் போய்விட்டது. மீண்டும் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் தமிழகம் பின்னோக்கித்தான் செல்லும். முன்னேறாது. தமிழகத்தில் அதிகமான பா.ஜ.க., தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே,நல்ல வேட்பாளர்களை நிறுத்தினால்  நிச்சயம் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழக பா.ஜ.க தலைவர் உள்ளிட்ட எந்த பதவியையும் நான் விரும்பவில்லை' என்றார்.

   

நீங்க எப்படி பீல் பண்றீங்க