வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (05/02/2018)

கடைசி தொடர்பு:09:17 (05/02/2018)

துபாயில் இறந்த தொழிலதிபரின் உடலை வாங்க மறுத்த திருப்பூர் தங்கை 

 துபாயில் இறந்த திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் விரும்பவில்லை. இதனால், நன்கொடை மூலம் பணம் வசூலிக்கப்பட்டு அவரது உடலைச் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 திருப்பூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி கருணாநிதி. இவர், கடந்த 2000ம் ஆண்டிலிருந்து  துபாயில் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார். கடந்த 19.1.2018ல் பொன்னுசாமி கருணாநிதி, மாரடைப்பால் அங்குள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்தநிலையில், இந்திய தூதரகம் மூலம் பொன்னுசாமி கருணாநிதியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் பொன்னுசாமியின் உடலைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

 இந்தத்தகவல், துபாயில் குடியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஷரப் தாமரசேரிக்கு தெரியவந்தது. உடனே, அவர் பொன்னுசாமி கருணாநிதியின் உடலை தமிழகத்துக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார். இதற்காக சென்னையைச் சேர்ந்த பா..ஜ.க. பிரமுகர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார் அஷரப். 
 இதையடுத்து, பொன்னுசாமி கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை செலவு தொகை மற்றும் உடலை சென்னைக்கு கொண்டு வரும் செலவு உள்ளிட்ட வகையில் சுமார் 14 லட்சம் ரூபாய் நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளதாக ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

 பா.ஜ.க. பிரமுகர் ராமகிருஷ்ணன்,இதுகுறித்து அவர் கூறுகையில், "துபாய், ஷார்ஜாவில் நண்பர்களுடன் சேர்ந்துதான் பொன்னுசாமி கருணாநிதி ஜவுளி தொழில் செய்துவந்துள்ளார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவுடன் மருத்துவமனையில் சேர்த்த நண்பர்கள் அதன்பிறகு எதையும் கண்டுக்கொள்ளவில்லை. பொன்னுசாமி கருணாநிதியின் பாஸ்போட்டில் அவரது மனைவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் குறித்த தகவல் தெரியவில்லை. அடுத்து, துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் பொன்னுசாமி கருணாநிதியின் தங்கை பெயர், முகவரி விவரம் உள்ளன. இதனால்தான் பொன்னுசாமி கருணாநிதியின் தங்கைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கை மற்றும் அவரது உறவினர்கள் பொன்னுசாமியின் உடலை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதனால், நாங்கள் அவரது உடலை தமிழகத்துக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்துள்ளோம். தனிப்பட்ட முறையில் பொன்னுசாமி கருணாநிதியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது தங்கை மற்றும் உறவினர்களிடம் சில நாளுக்கு முன்பு போனில் பேசினேன். ஆனால், அவர்கள் சில காரணங்களுக்காக பொன்னுசாமி கருணாநிதியின் உடலை வாங்க முன்வரவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல், துபாய் ஷார்ஜாவில் அனாதையாக இருப்பதை விரும்பாமல் நன்கொடை மூலம் பணம் வசூலித்து உடலை சென்னைக்கு கொண்டு வர உள்ளோம். சென்னை கண்ணாம்மா பேட்டை மயானத்தில் பொன்னுசாமி கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளேன். இதை  ஒரு சகோரனுக்கு நான் செய்யும் கடமையாகக் கருதுகிறேன்" என்றார்.