வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (04/02/2018)

கடைசி தொடர்பு:16:30 (04/02/2018)

"கடல் நீர் அரிப்பால் பாதிக்கப்படும் டேனிஷ் கோட்டை!" - கவனத்தில் கொள்ளுமா அரசு?

தமிழகத்தின் வரலாற்று சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றான டேனிஷ் கோட்டை தரங்கம்பாடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. அருங்காட்சியகமாக செயல்படும் இதனைக் காண தினமும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.  


இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக உள்ளதால் கடல்நீர் அரிப்பு ஏற்பட்டு கோட்டை பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. எனவே இதனை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள டேனிஷ் கோட்டை கி.பி.1620ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்து இங்கு நிரந்தரமாக ஆட்சி அமைத்த பிறகு டேனிஷ் அரசிடமிருந்து 1845 இல் ரூ.12.50 லட்சம் ரூபாய்க்கு டேனிஷ் கோட்டையை வாங்கினர். ஆங்கில அரசின் வசமிருந்த இந்த கோட்டை, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. கடந்த 1977-ம் ஆண்டில் இது தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. டேனிஷ் கோட்டை தமிழக வரலாற்றுச் சுற்றுலா மையங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் டேனிஷ் கோட்டை சிதைவடையும் அபாயத்தில் உள்ளது. தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள மாசிலாமணி நாதர் ஆலயத்திலிருந்து குறிப்பிட்ட பகுதிவரை கருங்கல் குவியல் அமைக்கப்பட்டிருந்தாலும் கடல் சீற்றத்தால் இந்த கற்குவியலிலும் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், டேனிஷ் கோட்டை கட்டப்பட்ட காலத்தில் கட்டப்பட்டு கடலில் மூழ்கிப்போன கோட்டை சுவர் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனினும், இப்போது வரை இந்த சுவர் தான் கோட்டையை பாதுகாத்து வருகிறது. எனவே டேனிஷ் கோட்டையின் நிரந்தர பாதுகாப்பிற்காக மாசிலாமணிநாதர் கோவிலிலிருந்து கடற்கரை வரை போடப்பட்டிருக்கும் கற்குவியலை டேனிஷ் கோட்டையைத் தாண்டியும் போட வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.