’’ரங்கசாமி ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை!’’ - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி

”மத்திய அரசின் பட்ஜெட்டால் மிகப்பெரிய அளவின் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது” என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி
 

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரிய அளவின் புறக்கணிக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டு இருக்கின்றனர். வரிச் சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்த்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வஞ்சிக்கபட்டிருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒரு வருடமாக சமநிலையில் இருந்தது. ஆனால் 2018-19 ஆண்டிற்கான பட்ஜெட்டை சமர்பித்த உடனேயே பங்குசந்தையில் 800 புள்ளிகள் வரை குறைந்து  நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. அந்த திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசிடம் எங்கே நிதி உள்ளது?. நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பூஜ்ய மதிப்பெண் கொடுக்கிறோம்.

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. அதன்மூலம் அரசின் பணம் 120 கோடி ரூபாய் அளவுக்கு வீணாக செலவு செய்யப்பட்டிருப்பதால், அதுகுறித்து விரைவில் விசாரணை நடைபெற இருக்கிறது. கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி நிதியை சரியான முறையில் கையாளவில்லை. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைத் தடுத்து நிறுத்தி ஒட்டுமொத்தமாக நிர்வாகத்தை பாழாக்கிய அவருக்கு, தற்போதுள்ள  காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி குற்றம்சாட்டுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை. ரங்கசாமியின் நிர்வாகத் திறைமையின்மையால்தான் மாநிலத்தின் வளர்ச்சி குன்றிவிட்டது. நாங்கள்தான் அதை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சரி செய்துவருகிறோம். தற்போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக ரங்கசாமி ஆட்சி மாற்றம் ஏற்படும் என பகல் கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது. எதிர்கட்சி தலைவர் பணியை மட்டுமல்ல தொகுதிப் பணிகளைகூட அவர் ஒழுங்காக செய்யவில்லை. தற்போது நடக்கும் எங்கள் ஆட்சி குறித்து ரங்கசாமியிடம் நேரடியாக விவாதம் நடத்த நாங்கள் தயார்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!