கழிப்பிட வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது அப்பிபட்டி என்ற அழகாபுரி. பெயரில் மட்டுமே அழகான இருக்கும் இந்த கிராமத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியே கழிப்பிடமாகிவிட்டது. இருந்த ஒரே ஒரு கழிப்பிடக் கட்டிடத்தையும், தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், கட்டிடத்தை இடித்துவிட்டு இடத்தை தனதாக்கிக்கொண்டார். வேறு வழி இல்லாமல் வெளி இடங்களுக்குச் சென்றால், லைட் அடித்து விரட்டுகிறது ஊராட்சி நிர்வாகம். இருந்த இடமும் இல்லாமல், திறந்த வெளிக்கும் செல்ல முடியாமல் பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கவே, இன்று காலை எரசக்கநாயக்கனூர் – ஓடைப்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் கிராம மக்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த ஓடைபட்டி போலீசாரால் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், உத்தமபாளையம் வட்டாச்சியர் பாலசண்முகம், சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி, உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பிருந்தா ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பிரச்சனைகளை கூறிய மக்கள், கூடவே, சின்னமனூர் – அப்பிப்பட்டி சாலையை சீர் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அதிகாரிகள், கழிப்பிடக் கட்டடம் இருந்த பழைய இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு புதிதாக கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படும் எனவும், சின்னமனூர் – அப்பிப்பட்டி சாலையை சீரமைத்து தரப்படும் எனவும் உறுதியளித்தனர். பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!