’’அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை தனிநபர்களிடம் ஒப்படைப்பது சமூக நீதிக்கு ஆபத்தானது!’’ - தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதங்கம்

இந்து அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு கோயில்களைத் தனிநபர்களிடம் ஒப்படைப்பது சமூக நீதிக் கொள்கைக்கு ஆபத்தானது என்று மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பழனிவேல் தியாராஜன் தெரிவித்துள்ளார். 

கோயில்

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து சேதத்தை பார்வையிட்ட பழனிவேல் தியாகராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘’மிகவும் மோசமான சம்பவம் இது. ஒரு விபத்து நடந்தால் அதை உடனே தடுக்கக் கூடிய எந்த வசதிகளும் இங்கு இல்லை. நான் அது சம்பந்தமாக கற்றவன் என்பதால், இனி இதுபோன்ற நிகழ்வுகள் வராமல் இருக்க என்னால் முடிந்த ஆலோசனைகளைச் சொல்வேன், பேரிடர் காலங்களில் வெளிநாடுகளில் எப்படி கையாள்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். 

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது, அதன் காரணம் என்ன என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.  நானும், இன்னும் சில நாட்களில் முழுமையாக ஆய்வு செய்து செயல் தலைவரிடம் காட்டி, அதுகுறித்த அறிக்கையை அ.தி.மு.க. அரசிடம் வழங்குவேன். மற்றவர்களைவிட மீனாட்சியம்மன் கோயில் குறித்து பேச எனக்கு அதிக உரிமை உள்ளது. என் தாத்தா, தந்தை ஆகியோர் அறப்பணிகள் எவ்வளவு செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். மீனாட்சியம்மன் கோயிலுக்கும் எங்களுக்கும் எவ்வளவு தொடர்பு என்பதும் தெரியும். இதுபோன்ற சம்பவங்களை வைத்து அறநிலையத்துறையை கலைத்து விட்டு பழையபடி தனிப்பட்ட நபர்களிடம் கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்று பி.ஜே.பியினர் சொல்கிறார்கள். அது ஆபத்தானது, அறநிலையத்துறை சரியில்லைதான், அதை சரி பண்ணனும், அதை விடுத்து மீண்டும் குறிப்பிட்ட சாதி ஆதிக்கத்தை வளர்க்க தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. என் தாத்தாதான் அனைத்து சாதியினரும் கோயிலில் வழிபடவும், அதை நிர்வாகம் செய்யும் வகையில் அறநிலையத்துறையை நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கினார், அந்த சமூக நீதிக் கொள்கையை  மாற்ற முடியாது.'' என்றார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!