வெளியிடப்பட்ட நேரம்: 21:26 (04/02/2018)

கடைசி தொடர்பு:21:26 (04/02/2018)

"பல்கலைக்கழகங்களில் அரசின் தலையீடு உள்ளது" - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி!

முன்குறிப்பு:

 

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியின் இந்தப் பேட்டி, கடந்த சில நாள்களுக்கு முன் நமக்கு அளிக்கப்பட்டது.

 

“பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்று பாட்டுப் பாடிய, பாரதியின் பெயரில் உள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்களும், முறைகேடுகளுமே உயர்ந்து நிற்கின்றன.

 

பாரதியார் பல்கலைக்கழகம்

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் முயற்சியால் 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்குப் பணம் தகுதியில்லை என்றிருந்தவரை, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், நாளடைவில் துணைவேந்தர் பதவி முதல் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவிவரை, அனைத்துக்கும் கோடிகள்தான் முக்கியத்தகுதி என்ற நிலை உருவான பிறகு, அனைத்துத் துறையின் ஊழல்களும் கோடியைத் தொட்டுவிட்டன.

 

“இப்போ இருக்கற துணைவேந்தருக்கு, அவரே பரவாயில்லை” என்று சொல்லும் அளவுக்கு ஊழல்களில் ஒவ்வொரு துணைவேந்தரும், தங்களுக்கு முந்தைய துணைவேந்தர்களை விஞ்சிவிடுகின்றனர். அப்படித்தான் தற்போதைய துணைவேந்தர் கணபதி, ஊழலில் மற்ற துணைவேந்தர்களை 'ஓவர்டேக்' செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

பேராசிரியர் நியமனம் முதல் 'ஸ்டடி சென்டர்' அமைத்ததுவரை, அனைத்திலும் ஊழல்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பேராசிரியர் பணி இடங்களில் நடந்த முறைகேடுகள், தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர் கல்வித்துறை இணைச் செயலாளரின் உத்தரவையும் மீறி, சிண்டிகேட் கூட்டத்தைக்கூட்டி, அவசர அவசரமாக கல்லா நிரப்பப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த மோகன் ராஜினாமா செய்யவே, இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுத்து விசாரித்து வந்தது.

பாரதியார் பல்கலைக்கழகம்

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, பல்கலைக்கழகத்திலும், துணைவேந்தர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அதில், ஊழல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தாலும், துணைவேந்தரைக் கைது செய்வதற்கு மேலும், சில ஆதாரங்களைத் திரட்டும்பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் உதவிப் பேராசிரியாராக பணிபுரிந்து வருபவர்  சுரேஷ். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எம்.பி.சி கேட்டகிரியின் கீழ், கடந்த 2016 நவம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் பணம் கொடுக்கவில்லை. இதனிடையே, சுரேஷிடம் 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து நச்சரித்துள்ளது. இதையடுத்து, இப்பிரச்னையை லஞ்ச ஒழிப்புத்துறையினரும் கையிலெடுத்தனர்.

 

சுரேஸ்

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர்

இதற்காக 1 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், மீதித்தொகையை செக்காகவும் சுரேஷ் வழங்கும்போது, துணைவேந்தரை கையும், களவுமாகப் பிடித்துள்ளனர் லஞ்சஒழிப்புத்துறை போலீஸார். துணைவேந்தர் கணபதியைக் கைதுசெய்வது தொடர்பாக, கவர்னர் மாளிகையில் இருந்து ஏற்கெனவே அனுமதியும் வாங்கியுள்ளனர். கணபதி தற்போது கைது செய்யப்பட்டதற்கு வேண்டுமானால், இந்த ஒரு சம்பவம் காரணமாக இருக்கலாம். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வளையத்தில் கணபதி வந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் முக்கியமானது, பேராசிரியர் பணி நியமனத்துக்கு 30 முதல் 50 லட்சம் ரூபாய்வரை லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டுதான்.

 

இதையடுத்து, கடந்த ஆண்டு லட்சுமி பிரபா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை மீறி, தனக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது, சாதி ரீதியாக இழிவுபடுத்தியது, அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த அவரது கணவரை பணியைவிட்டு நீக்கியது என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டுகளை வைத்தார் லட்சுமி பிரபா.

 

கணபதிஇந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், "தன் மீது நடவடிக்கை பாயக்கூடாது என்பதற்காக, நீதிபதிக்கே ஒரு தொகை பேசி செட்டில் செய்துவிட்டார் துணைவேந்தர்" என்கின்றனர் சிலர். தனக்கு எதிராக செயல்படுபவர்களை மிரட்டுவது, பணியை விட்டு நீக்குவது போன்ற செயல்களிலும், கணபதி ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு நாம் துணைவேந்தர் கணபதியைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், "மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத்துக்கான 1,000 கோடி ரூபாய் நிதியைப் பெற பாரதியார் பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது. என் மீதுள்ள வழக்கை விரைவில் விசாரியுங்கள் என்றுதான், எங்களது வழக்கறிஞர் மூலமாக முயற்சித்து வருகிறோம்.

 

பதிவாளராக இருந்த மோகன் ராஜினாமா எல்லாம் செய்யவில்லை. நாங்கள்தான் அவரை நீக்கினோம். சிண்டிகேட்டில் யாரை எடுப்பது என்று கையெழுத்து போட்டுவிட்டு, அப்பாய்ன்மென்ட் எல்லாம் ரெடி செய்துவிட்டு, பிரச்னை ஆனவுடன் என் மீது பழி போட்டுவிட்டார். அப்படி ஒரு லெட்டர் வந்ததையே அவர் ஆரம்பத்தில் எனது கவனத்துக்குக் கொண்டுவரவில்லை. அந்த லெட்டர் போஸ்ட் செய்யப்பட்டிருந்தவிதமும் வழக்கத்துக்கு மாறாக இருந்தது.

 

சிண்டிகேட் நடத்தக்கூடாது என்று உத்தரவிட அரசுக்கு உரிமையில்லை. இது அட்டானமஸ் பாடி. ஆனால், இதில் அரசின் தலையீடு அதிகம் உள்ளது. இங்குள்ள (கோவை) சிலரின் தலையீடுகளும் இருந்தது. அதை நான் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் தற்போது இந்த விளைவுகளை சந்தித்துள்ளோம். இதில் நிறைய சதி வேலைகள் உள்ளன. மோகன் சதி செய்துள்ளார்" என்றார்.

 

"பல்கலைக்கழகங்களில் அரசு தலையீடு இருக்கிறது" என்று அவர் சொன்ன, சில நாள்களிலேயே, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


டிரெண்டிங் @ விகடன்