வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (05/02/2018)

கடைசி தொடர்பு:16:38 (12/07/2018)

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும்-திருநாவுக்கரசர் பேச்சு

 ஆட்சி மாற்றத்தால் மட்டுமே சிறுபான்மை மக்களைத் திருப்திப்படுத்த முடியும். அது, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் ராமநாதபுரத்தில்  பேசினார்.

ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டத்தில் திருநாவுக்கரசர்
 

ராமநாதபுரம் சந்தைத் திடலில், மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு, மாவட்டத் தலைவர் ஏ.வருசை முகம்மது தலைமையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.எல்.முஹம்மது பைசல் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில், கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் உரையாற்றினர்.

.கூட்டத்தில் பங்கேற்ற திருநாவுக்கரசர், 'இந்திய அளவில் இரு கட்சிகளே மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக இருக்கின்றன. அதில் ஒன்று காங்கிரஸ் கட்சி, மற்றொன்று இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி. காங்கிரஸ் 1885-ம் ஆண்டும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1948 -ம் ஆண்டும் துவக்கப்பட்டன. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அனைத்து மதத்தினருக்கும் ஒரே உரிமைதான் உள்ளது. தலாக் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதில் மோடி தலையிட வேண்டிய அவசியமே இல்லை. சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை ஏற்க மாட்டோம். அதானியிடம் மோடி இந்தியாவை விற்று விட்டார். தமிழக அரசும்  மத்திய அரசின் பினாமி அரசாகத்தான் செயல்படுகிறது.

 பட்ஜெட்டில் 10 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 50 லட்சம் இந்தியர்களுக்கு மருத்துவ உதவித்திட்டத்துக்கு 1200 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இதை, ஒரு நபருக்கு எனக் கணக்கிட்டால், ரூ.120 மட்டுமே வரும். எனவே, இது ஒரு ஏமாற்றுத் திட்டமாகும். இந்தியா முழுவதும் 126 விமன நிலையங்கள் உள்ளன. இவை 600 விமான நிலையங்களாக மாற்றப்படும் என்றும் 36 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு ரயில் பாதைகளும்,16 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு இரட்டை ரயில் பாதைகளும் அமைக்கப்படும் என்பவையெல்லாம் ஒராண்டில் செய்துவிட முடியாது. ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்துசெய்திருப்பது இஸ்லாமிய மக்களை விரோதியாக்கியிருக்கிறது.விவசாயிகளின் வருமானத்தை 2022-ல் இரு மடங்காக்க முடியும் என எப்படிச் சொல்லமுடிகிறது எனத் தெரியவில்லை. மொத்தத்தில் ஆட்சி மாற்றமே சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்திட முடியும். அது, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்' என்றார்.