“ஆணவக்கொலைகள் அதிகரித்துவருவது நல்லதல்ல!”- கொந்தளித்த திருமாவளவன்.

மற்ற விஷயத்தில் அலட்சியம் காட்டுவது போல காவிரிப் பிரச்னையில்  தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சனம்செய்துள்ளார்.

                     

அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியார்களிடம் பேசியபோது, 'தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆணவக்கொலைகள் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். 

                       

ஜெயங்கொண்டத்தில், கலப்புத்திருமணம் செய்துகொண்ட வீரத்தமிழன் மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது ஆணவக் கொலையா? என போலீஸார்  விசாரணை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டியாவது 10 ஆண்டுகள் சிறை என்பதை 8 ஆண்டுகளாகக் குறைத்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் உள்ளிட்ட 25 பேரை, நன்நடத்தை விதிகளின்படி விடுதலைசெய்ய வேண்டும்.

                               

மின் வாரிய ஊழியர்கள், சத்துணவு அங்கன் வாடி ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்கள், போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடக் கழகம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கலந்துகொள்ளும். மேலும் சி.பி.எஸ்.இ-யில் படித்த மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் நீட் தேர்வு இருப்பது ஒருதலைபட்சமானது.காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற்றுத்தர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற விஷயத்தில் அலட்சியம்காட்டுவது போல காவிரிப் பிரச்னையில்  தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது' என்று வலியுறுத்தினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!