பேட்டாவுக்கு ஆசைப்பட்டு வேகமாகச்செல்லும் வாகனங்கள்!- அச்சத்தில் மக்கள்


 

புதுக்கோட்டை மாவட்டத்தில், இரு வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துக்களால் பொருள்கள் நாசமாகின. இரண்டிலுமாக ஐந்து பேர் காயமுற்றனர். அதிகாலையில் நடக்கும் இதுபோன்ற விபத்துகளால்,அந்தப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருச்சியில் உள்ள காந்தி காய்கறிச் சந்தையிலிருந்து தினமும் கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய  ஊர்களுக்கு காய்கறிகள் மொத்தமாக  வாகனங்களில் ஏற்றிவந்து, அந்தந்த ஊர்களில் இறக்குவது  வழக்கம். அப்படி திருச்சியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு காய்கறி ஏற்றிவந்த லாரி ஒன்று எதிர்பாராதநிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கந்தர்வகோட்டை கோமாபுரம் அருகே கவிழ்ந்தது. இதில், மூன்று பேர்  படுகாயம் அடைந்தனர். ஒருவர் மட்டும் வாகனத்தில் சிக்கிக்கொண்டதால், கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்துவந்து அவரைக் காப்பாற்றினர். மூவரையும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர்.

அதுபோல, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மீன் ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சாலையில் சிதறிச் சேதம் அடைந்தன. ஸ்ரீதர் என்ற லாரி ஓட்டுநர், க்ளீனர் அந்தோணி என்பவருடன் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி நோக்கி மினி லாரியில் மீன் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தார். திருமயத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஸ்ரீதரும் அந்தோணியும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த திருமயம் காவல்துறையினர், சம்ப இடத்துக்கு விரைந்துசென்று, விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவனையின் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த இரு விபத்துகுறித்து கந்தர்வகோட்டைதிருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

"காய்கறி, மீன்கள் ஏற்றிச்செல்லும் இதுபோன்ற சரக்கு வண்டிகள் எவ்வளவு சீக்கிரமாக மார்க்கெட்டுகளுக்கு வருகிறதோ, அதற்குத் தகுந்தாற்போல, டிரைவருக்கு கூடுதல் பேட்டா வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு தினமும் மீன்களை ஏற்றிச்செல்லும் அரைபாடி வண்டிகளில் மட்டுமே இருந்த இந்தப் பழக்கம், இப்போது உள்ளூர்களிலும் பரவிவிட்டது. பைபாஸ் ரோடுகளும்  அதிவேகமாகச் செல்வதற்குத் தோதாக அமைந்துவிட்டது. இப்படி பேட்டாவுக்கு ஆசைப்பட்டு படுவேகமாகச் செல்லும் வாகனங்களால், ரோட்டில் நடக்கவும் டூவீலரில் போகவும் பயமாக இருக்குது."என்று திருமயம் பகுதி மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பேசினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!