வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (05/02/2018)

கடைசி தொடர்பு:08:35 (05/02/2018)

திருப்பூரில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு! - ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பூரில், அடுத்த சில வாரங்களில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான கால்கோல் நடும் விழா, நேற்று (04-02-2018) கோலாகலமாக நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில், வரும் 18-ம் தேதி அன்று, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல்  ஜல்லிக்கட்டுப் போட்டி என்பதால், அதற்கான முழு ஏற்பாடுகளையும் கண்காணிப்பதில் மாவட்ட நிர்வாகம் வெகு மும்முரமாக இயங்கிவருகிறது. இம்மாதம் 18- ம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வாடிவாசல் கால்கோல் நடும் விழாவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார். 

அப்போது, ’திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி என்பதால், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதில் நன்கு அனுபவம்வாய்ந்த மதுரை மற்றும் திருச்சி பகுதி ஜல்லிக்கட்டு சங்கத்தினரின் வழிகாட்டுதலுடனும் போட்டியை நடத்த இருக்கிறோம். இதில், அலங்காநல்லூர், பாலமேடு, காங்கேயம், வெள்ளக்கோவில், தம்மம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் பங்குபெற இருக்கின்றன. தற்போதுவரை 500-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கும் காளைகளை 18 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனையில் ஈடுபடுத்த இருக்கிறோம். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆர்வத்துடன் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கும் வேண்டிய அனைத்து வசதிகளையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்துகொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது’  என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.