வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (05/02/2018)

கடைசி தொடர்பு:10:04 (05/02/2018)

‘கொள்ளையனின் கையில் அதிகாரியின் விசிட்டிங் கார்டு!’ - வேட்டையாடு, விளையாடு! பகுதி -20

காவல்துறை

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“...  அடுத்ததாகத்  திருடவேண்டியது, தமிழ்நாட்டில்தான் என்று முடிவெடுத்தபோதுதான் ஆந்திரப் போலீஸார், எங்களைப் பொய்யான வழக்கில் கைதுசெய்து லாக்கப்பில் வைத்துவிட்டனர். தொடர்ந்து  மூன்றுநாள்கள் ஸ்டேஷனில் கிடந்தோம். ஸ்டேஷனில் டியூட்டிக்கு வருபவர்களும் எங்களை அடித்தார்கள், டியூட்டி முடித்து வீட்டுக்குப் போகிறவர்களும் அடித்துவிட்டுத்தான் போனார்கள். கத்திக் கதறினோம், போலீஸார் எங்களை விடுவதாக இல்லை. மூன்று பேரின் கைரேகையையும் அன்றுதான் எடுத்தார்கள். மாரேடிபூடி நாகபூஷணமும், தோட்டா கிருஷ்ணமூர்த்தியும் அப்பாவிகள் என்று  மூன்றாவது நாள் காலையில் முடிவுசெய்து அனுப்பி விட்டார்கள். என்னை மட்டும் நான்காவது நாள்தான் விட்டார்கள். போலீஸ்மீது இருந்த கோபத்தால், அவர்களின் பண லாக்கரை, ஸ்டேசனில் ஆள் இருக்கும்போதே திருடிவிட்டுத் தப்பித்தேன். அந்தச் சம்பவத்துக்குப் பின்,  என்கோபம் தீரும் வரை, ஆந்திராவிலேயே  வரிசையாகத் திருட ஆரம்பித்தேன். எவ்வளவு வீடுகளில் திருடியிருப்பேன் என்று கணக்கு எதுவும் வைக்கவில்லை. ஸ்டேசனில் எடுத்த கைரேகையை வைத்து, ஆந்திராவில் நடக்கும்  திருட்டுகளுக்கு காரணம் நான்தான் என்று போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், எங்களைப் பிடிக்க முடியவில்லை. தோட்டா கிருஷ்ணமூர்த்தி எப்போதுமே ஸ்பாட்டுக்கு வர மாட்டான், துப்பாக்கியுடன் கண்காணிப்பில் மட்டுமே இருப்பான். மாரேடிபூடி நாகபூஷணம் என்னைவிட, வேகமாகத் திருடுவான், ஆனால், அவன் கைரேகை எங்குமே பதியாது. சௌத் டவுன் போலீஸ் ஸ்டேசனில் எங்களுக்கு விரல்ரேகை எடுத்ததில் இருந்து, அவன் கையுறை அணிந்துகொள்ள ஆரம்பித்தான். ஆந்திராவில் என் கைரேகை பதிந்த இடத்தில் எல்லாம் மாரேடிபூடி நாகபூஷணமும், தோட்டா கிருஷ்ணமூர்த்தியும் கூட இருந்திருப்பார்கள் என்று ஆந்திரப் போலீஸார் முடிவு செய்துவிட்டனர். மூன்று பேரில் யாரைப் பிடித்தாலும் போதும் என்று ஊர் முழுவதும் எங்களுக்காக வலை விரித்தனர்.

ஜி.லோகநாதன் (எஸ்.ஐ.ஓய்வு) தனிப்படை போலீஸ்போலீஸார் எவ்வளவு முயற்சி செய்தும் எங்களைப் பிடிக்க முடியாததால், தொடர்ந்து ஆந்திராவில் திருட  ஆரம்பித்தோம். ஆந்திரப் போலீஸுக்கு சவால் விடுவதுபோல் நான் மட்டும் கையுறை போடாமலே தொடர்ந்து திருடினேன். திருட்டில் தொடங்கியது, கொள்ளை வரைக்கும் எங்களைக் கொண்டு போய் நிறுத்தியது. திருட்டுத் தொழிலில் ஆந்திராவிலேயே வருமானம் அதிகமாகக் கொட்டியதால் தமிழ்நாட்டில் திருடும் திட்டத்தை தள்ளிப் போட்டோம். ஓய்வில்லாமல் திருட்டும், கொள்ளையுமாக நாங்கள் வேகம் காட்டியதால், எங்களைச் சுட்டுப்பிடிக்க ஆந்திரப் போலீஸாருக்கு ரகசிய உத்தரவு கொடுத்துவிட்டார்கள். இனிமேலும், ஆந்திராவுக்குள் கைவரிசை காட்டினால் ஆபத்து என்ற நிலைமை வந்த பின்னால்தான், தமிழ்நாட்டுக்குள் நுழைய முடிவெடுத்தோம்.

சென்னை பெரிய நகரம் என்பதால்,  திருடிவிட்டுத்  தப்பிக்கும் வாய்ப்புப் பற்றியெல்லாம் கணக்குப் போட்டுத்தான் சென்னையில் திருட முடிவு செய்தோம். அதன்படி வியாழன் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சென்னையில் திருடுவது சனி, ஞாயிறுகளில் ஆந்திராவில் இருப்பது என்று திட்டமிட்டோம். நாங்கள் முதல் முறை சென்னைக்கு வந்தபோது ஒருவாரம் வரை சென்னையின் சாலையோரங்களில் தங்கினோம், சில நாள்கள் குறைந்த வாடகைகொண்ட விடுதிகளில் தங்கினோம், ஆனால், எங்கும் திருடவில்லை. திருடப்போகும் வீடுகளை மட்டும் வேவு பார்த்துவிட்டுத்  திருடாமலே ஆந்திராவுக்குத் திரும்பினோம். ஆந்திராவில் ரயில்வே குடியிருப்பு வீடுகளில் 'கை' வைத்தால், போதுமான அளவுக்குப் பணமும்- பொருளும் கிடைக்கும். சென்னையில் ஒருவாரம் தங்கியபோது அதே போன்ற வீடுகளை ஏழு இடங்களில் பார்த்தோம். அவற்றில் திருடி முடித்தபின், சென்னையை விட்டு வெளியே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

ஐந்து குடியிருப்புகள் வரை திருடினோம். ஆறாவது குடியிருப்பில் திருடத் தயாரானபோதுதான், உங்களிடம் மாட்டிக்கொண்டோம். சென்னையில் கொள்ளையடிப்பது என்பது மட்டும்தான் எங்கள் திட்டத்தில் இருந்தது. போலீஸ் குடியிருப்புகளில் மட்டுமே கொள்ளையடிப்பது  என்பதுபோல் எந்தத் திட்டமும்  இல்லை. ஆந்திராவில் இருக்கும் ரயில்வே குடியிருப்புகள் போலவே இந்தக் குடியிருப்புகளும் காட்சியளித்ததால் திருட இறங்கினோம். அது போலீஸ் குடியிருப்பு என்பதே ஆந்திராவில் உங்களிடம் மாட்டிக்கொண்டபிறகுதான் தெரியும். ஆந்திர ரயில்வே குடியிருப்புகளும், சென்னையில் இருக்கும் போலீஸ் குடியிருப்புகளும் ஒரே கலரில் இருந்ததால் நாங்கள் இதை ரயில்வே குடியிருப்புகள் என்றுதான் நினைத்தோம். எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது,அதனால்தான் இடம் தெரியாமல் திருடிவிட்டு இப்படி மாட்டிக்கொண்டோம். சந்தேகத்தின் பேரில் போலீஸார் எங்களைப் பிடித்துவிடக்கூடாதே தனிப்படை எஸ்.ஐ.ராஜ்குமார் (இன்ஸ்பெக்டர், இன்று)என்பதற்காக வீடு கட்டும் வேலைக்குத் தேவையான பொருள்களை கையில் வைத்திருப்போம்.

போலீஸார் நம்மீது சந்தேகப்படுகிறார்களா என்று பார்க்க, போலீஸ் ஸ்டேசன் பக்கமாகவே போய் வருவோம். ஒருமுறை, அப்படிப் போனபோது, எங்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். 'வேலை முடிந்ததும் கிளம்பி ஊருக்குப் போய்விட வேண்டும்' என்று அதட்டினார்கள். பகலில் வேவு பார்க்கப் போன இடத்தில் நான்கைந்து விசிட்டிங் கார்டுகள் கிடைத்தன, எப்போதாவது தேவைப்படுமே என்று அதை எடுத்து வைத்திருந்தேன். அந்தக் கார்டுகளை அவர்களிடம் காட்டி, 'இவர்கள் வீடுகளில்கூட வேலைக்குக் கூப்பிட்டார்கள், போய் வேலை செய்து கொடுத்திருக்கிறோம்' என்றேன்.”

அதில் ஒரு கார்டைப் பார்த்த போலீஸ்காரர், 'முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே?' என்றதோடு, அங்கிருந்த இன்னொரு போலீஸ்காரரிடம், 'அய்யா வீட்டுல வேலைக்கு வந்திருக்காங்க' என்று சொன்னார். அந்த விசிட்டிங் கார்டு முக்கியமான ஒருவரின் கார்டு என்பதைப் புரிந்துகொண்டேன். அதை எப்போதும் கையில் வைத்திருப்பேன்' என்றான் முண்டேல்பாஜூ.

'அந்தக் கார்டைக் காட்டுப் பார்க்கலாம்?' என்று எஸ்.ஐ. ராஜ்குமார் சார் கேட்க, மூட்டை கட்டி வைத்திருந்த  சட்டைப் பையிலிருந்து அந்த விசிட்டிங்  கார்டை வெளியே எடுத்துக் காட்டினான், முண்டேல்பாஜூ. அது  போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரின் விசிட்டிங் கார்டு...


டிரெண்டிங் @ விகடன்