வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (05/02/2018)

கடைசி தொடர்பு:14:46 (05/02/2018)

டிப்பர் லாரி டிரைவர்களின் அசதி; பறிபோன மூன்று உயிர்கள்! - கலங்கும் கந்தர்வக்கோட்டை

கந்தர்வக்கோட்டை அருகே, இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்து ஒன்றில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளம்பட்டியில், தஞ்சை-புதுகை நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியும்  ஸ்விஃப்ட் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் வந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். புதுகை நகருக்கு அருகில் உள்ள திருவப்பூரைச் சேர்ந்தவர், சுந்தர்ராஜன். இவர், ஒரு ஹோமியோபதி மருத்துவர். ஹரிணி  என்ற பெயரில் ஒரு சிறு கிளினிக் நடத்திவருகிறார். இவரும் இவருடைய நண்பர் கனகராஜ் என்பவரும் தஞ்சாவூரில் நடைபெறும் விசேஷம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு மருத்துவருக்குச் சொந்தமான காரில் புறப்பட்டிருக்கிறார்கள். காரை, உதயக்குமார் என்ற டிரைவர் ஓட்டிவந்திருக்கிறார். அதுபோல தஞ்சாவூர் பகுதியிலிருந்து மணல் ஏற்றிச்செல்வதற்காக டிப்பர் லாரியை மஞ்சப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிவந்திருக்கிறார். இந்த இரண்டு வாகனங்களும் கந்தர்வக்கோட்டை வளம்பட்டியில் உள்ள தனியார் முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.


மிக வேகமாக வந்த டிப்பர் லாரி, மித வேகமாக வந்த ஸ்விஃப்ட் காரில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த கார், மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி சாலையிலேயே நின்றது. காரில் பயணித்த மூவரும் அலறக்கூட அவகாசம் இல்லாமல் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள். பேரிடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த வளவம்பட்டி பொதுமக்கள், விபத்தைத் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரையாவது காப்பற்றலாம் என்று காரை நெருங்கியவர்கள், காருக்குள் மூவரும் இறந்து கிடப்பதைக் கண்டு, உடனடியாக ஆதனக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார், சிறு காயங்களுடன் இருந்த டிப்பர் லாரி டிரைவர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். காரில் இறந்துகிடந்தவர்களின் அடையாள அட்டைகளைக்கொண்டு, புதுக்கோட்டையில் வசிக்கும் அவர்களின் வீட்டாருக்குத் தகவல்கள் கொடுத்தனர். இறந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி உடற்கூறு பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தை நேரில் பார்த்த வளவம்பட்டி பொதுமக்கள், "அதிக வளைவுகளோ, குண்டு குழிகள் இல்லாத நேர் சாலையாக தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலை இருக்கிறது. இந்தச் சாலையில், அரசுப் பேருந்துகளே வேகமாகத்தான் செல்லும். இந்தப் பகுதியில், இரவு நேரத்தில் மணல்அள்ளும் டிப்பர் லாரிகள் அதிக அளவில் வந்துபோகின்றன. அந்த லாரி டிரைவர்கள், தொடர்ந்து பத்து நாள்கள் ஓட்டுவார்கள். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து ஓட்டுவதாலும் மது அருந்திவிட்டு ஓட்டுவதாலும் போதிய தூக்கமின்மையாலும், பேய்வேகத்தில் செல்வதாலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன" என்றார்கள்.