வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (05/02/2018)

கடைசி தொடர்பு:11:47 (05/02/2018)

`மோடி பக்கோடா; அமித்ஷா பக்கோடா' - பெங்களூரு சாலையை அதிரவைத்த பட்டதாரிகள்

modi pakoda

'நாட்டில் வேலை வாய்ப்புப் பெருகவில்லையே' என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, 'சாலையோரத்தில் கடை அமைத்து, பக்கோடா விற்று 200 ரூபாய் சம்பாதிப்பதுகூட முன்னேற்றம்தானே' என்று கூறியிருந்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு பல்வேறு மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி வருகைதந்தார். அப்போது, பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் சாலைகளில் பக்கோடா விற்றனர். 

பட்டதாரி உடையில், அவர்கள் சாலைகளில் ’மோடி பக்கோடா’, ’அமித்ஷா பக்கோடா’ என்று கூவிக் கூவி பக்கோடா விற்றனர். பாரதிய ஜனதா பொதுக் கூட்டம் நடந்த அரண்மனை மைதானத்தின் அருகேயே, பக்கோடா விற்ற மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர். கோவா-கர்நாடகத்துக்கிடையே உள்ள மகதாயி நதிநீர்ப் பிரச்னையில் பிரதமர் மோடி தலையிடக் கோரி, கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

pakoda

கர்நாடகா மாநிலத்தில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. சில நாள்களுக்கு முன், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்ற பொதுக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றபோதும், கன்னட அமைப்புகள் பந்த்தில் ஈடுபட்டன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க