வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (05/02/2018)

கடைசி தொடர்பு:10:42 (06/02/2018)

ஆல்காட் குப்பம் விழாவும்.. முத்துலெட்சுமி அக்கா மீன் கடையும்! #OlcottKuppamVizha

சென்னையின் தனித்த உணவு வகைகளில் முக்கியமானது, மீன். பெசன்ட் நகரிலும் பட்டினம்பாக்கத்திலும் கிடைக்கும் மீன் உணவுகளின் ருசி அலாதியானது. சமைத்த கைகளுக்குத் தங்க வளையல் வாங்கிப் போடலாம். அப்படியான கைகள்தான் முத்துலெட்சுமி அக்காவுக்கு.

முத்துலெட்சுமி

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டு வரும் ஊரூர் ஆல்காட் குப்பம் விழா, டி. எம் கிருஷ்ணா, நித்தியானந்த் ஜெயராம் போன்றவர்களால் நடத்தப்படுகிறது. குப்பத்தில் கர்நாடக இசை நிகழ்வுகளை நடத்துவது, சபாவில் கானா இசை நிகழ்வை நடத்துவது இவர்களின் வழக்கம். இந்த முறை பெசன்ட் நகரில் நேற்று இரவு ஆல்காட் குப்பம் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி அக்கா மீன் சமையலைப் பற்றி வகுப்பு எடுத்துப் பார்த்தவர்களைச் சப்புக் கொட்ட வைத்தார்.

திமிலைப் புட்டு செய்து காட்டி விளக்கிக்கொண்டிருந்தவரில் பவ்யமாய் வாங்கிச் சுவைத்தபடி நகர்ந்தபோது, 'கூச்சத்தைவிட்டு இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாமோ?’ என்று தோன்றியது. 'சுறா புட்டும் நல்லா இருந்ததில்லே' என அருகில் இருப்பவர்கள் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். இறால் குழம்பு செய்யும் பக்குவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார் முத்துலெட்சுமி அக்கா. இன்னொரு பக்கம், ‘நண்டு சிண்டுக்கள்’ சினிமா பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மைக்கை வைத்திருந்தவர் ‘'எட்டாம் வாய்ப்பாடு சொல்லுங்க'’ என்றதும், கப் சிப் என அடங்கிக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆவி பறக்க இறால் குழம்பு தயாரானதும், தட்டில் போட்டு அனைவருக்கும் சுவைக்கக் கொடுத்துவிட்டு, 'என் வேலை முடிஞ்சது பாஸ்' என்பதுபோல கிளம்பிய முத்துலெட்சுமி அக்காவை மடக்கினோம்.

”அக்கா, உங்க சொந்த ஊரே இதுதானா?” 

''இல்லே கண்ணு. என் சொந்த ஊரு கல்பாக்கம். அணுமின் நிலையம் இருக்கே அது பக்கத்துல வீடு. கல்யாணம் பண்ணிட்டு வந்து 17 வருஷம் ஆகுது. என் அப்பாவும் அண்ணனும் கடலுக்குப் போறவங்கதான். என் மாமனாரும் கடலுக்குப் போறவர். என் வீட்டுக்காரரு தொழிலு கத்துக்கலே. மெக்கானிக் வேலையில் இருந்தாரு. இப்போ, டிபன் கடை வெச்சிருக்கோம். ஒரு ஐயரு வீட்டுக்கும் சமைச்சுக் கொடுக்கறேன்.'' முத்துலெட்சுமி

”உங்க டிபன் கடையில் என்ன ஸ்பெஷல்?'' 

''காலையில் தோசை, இட்லி, முட்டைனு டிபன் ஐட்டம் இருக்கும். மதியத்துக்கு மீன் குழம்பு, எறா தொக்கு, கடம்பா, மீன் வறுவல் இருக்கும். எறாவும் கடம்பாவும் கிடக்கிறதைப் பொறுத்து. மீன் வறுவல் எப்பவும் இருக்கும். பேச்சிலர்ஸ் யாராவது கேட்டால், அவங்களுக்கு ஏத்த மாதிரி சமைச்சுத் தருவோம். முன்னாடி நைட்டுகூட கடை போட்டுட்டிருந்தோம். இப்போ உடம்பு முடியறது இல்லே.'' 

”இதுல வர்ற வருமானம் போதுமானதா இருக்கா?” 

''இல்லேதான். ஆனா என்ன செய்றது? நாங்களும் சாப்பிட்டு ரெண்டு பசங்களைப் படிக்கவைக்கிறது கஷ்டமாகத்தான் இருந்தலும் சமாளிக்கிறோம்.''

”இந்த புரோகிராம் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?” 

''இங்கே பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கும்போது நாங்க பஜ்ஜி போட்டு விற்போம். மதியமும் நைட்டும் எங்க கடையில் வந்து சாப்பிடுவாங்க. ருசி பிடிச்சுப்போய், இந்த புரோகிராமுக்குக் கேட்டாங்க. என் புருஷன், ஊர் பஞ்சாயத்துக்காரவங்ககிட்டே சொன்னேன். அவங்க சரின்னதும் சம்மதிச்சேன். பத்திரிக்கையில பேட்டி எடுத்துப் போட்டதும் என் வீட்டுக்காரருக்கு சந்தோஷம். (வெட்கமாகச் சிரிக்கிறார்). எனக்குப் படிக்கத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இதுதான். என் திறமைக்கு மரியாதை தந்தது சந்தோஷமா இருக்கு.'' 

”எந்த வயசிலிருந்து சமைக்கிறீங்க?” 

''அது ஆச்சு. 10 வயசுலேயே எறா குழம்பு வெச்சேன். என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் என் சமையல் ரொம்பப் புடிக்கும். விரும்பி விரும்பிச் சாப்பிடுவாங்க. 'எதா இருந்தாலும் நீயே செஞ்சிடும்மா’னு அப்பா சொல்வார்.''

முத்துலெட்சுமி

“வீட்டிலும் எப்போதும் மீன் சமையல்தானா?'' 

''என் அப்பா மீன் இல்லாமல் சாப்டவே மாட்டார். செவ்வாய், வெள்ளிக்கிழமையில ரசம் வெச்சாலும் ஒரு மீனு இருக்கணும். என் மாமனாரும் அப்படித்தான். ஆனா, நான் கவுச்சி சாப்பிடாதவங்க வீட்டுல வேலை செய்யறதால, இப்போவெல்லாம் அங்கே செஞ்ச மாதிரியே எங்க வீட்டிலும் செஞ்சுடுவேன். எப்போவாவது மீன் சமைப்போம்.'' 

”வீட்டுக்கும் கடைக்கும் மாசலாவில் காரம் புளிப்புக்கு என்னவெல்லாம் போட்டு அரைப்பீங்க?” 

''மிளகு, சீரகம், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெரிய மஞ்சள், பூண்டு, கருவேப்பிலை இதெல்லாம் போட்டு அரைப்பேன்.'' 

”மீன் சமைக்கிறது கஷ்டமா இல்லே கழுவுறது கஷ்டமா?” 

”ரெண்டுந்தான் கஷ்டம்! ரெண்டுக்கும் தனித்தனி முறை இருக்கு. எறா தலையை சைடு வாக்குல, வாட்டமா திருவி எடுத்தா மொத்தக் கழிவும் வந்துடும். சிலர் அது தெரியாமல் கத்தியில எடுக்குறாங்க. மீன் வயித்துல இருந்து கழிவை எல்லாம் நீக்கிட்டு, கல்லுப்பு போட்டு கழுவினா வேல முடிஞ்சது. எறா செய்யுறதும் வறுத்த மீன் செய்யுறதும் கொஞ்சம் ஈசி. கொழம்புன்னா, அதிலேயே ஊறி மீன் வேகறதுக்கு டைம் எடுக்கும். எறாவுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்தினா போதும். மீன் வகையில் இயற்கையாகவே தண்ணி இருக்கும். அதனால் ரொம்ப தண்ணி ஊத்திடக் கூடாது” 

முத்துலெட்சுமி அக்கா சொல்லச் சொல்ல அவர் வார்த்தையிலும் மீனின் நறுமணம்!


டிரெண்டிங் @ விகடன்