வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (05/02/2018)

கடைசி தொடர்பு:13:58 (05/02/2018)

'யார் முதலில் முந்துவது?' - இரண்டு டிரைவர்களின் போட்டியால் சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்

 யார் முதலில் முந்திச்செல்வது என்று கல்லூரிப் பேருந்து ஓட்டுநருக்கும் சுற்றுலா வேன் ஓட்டுநருக்கும் இடையே நடந்த போட்டியில், வேன் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சுற்றுலாப் பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், ஈராேட்டிலிருந்து கரூருக்கு சுற்றுலா வந்துள்ளனர். கரூர் மாவட்ட எல்லையான புன்னம்சத்திரம் அருகே அந்த வேன் வந்தபாேது, அதன் பின்னே தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று வந்துள்ளது. சுற்றுலா வேனை அந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநர் முந்திச்செல்லப் பார்த்திருக்கிறார். இதனால், இரண்டு டிரைவர்களும் அவரவர் வாகனங்களை விரைவாக ஓட்டியுள்ளனர். இரண்டு வாகனங்களிலும் உள்ள பயணிகளும், மாணவர்களும் அலறியிருக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் கல்லூரிப் பேருந்து ஓட்டுநர், தனது பேருந்து சுற்றுலா வேனை முந்திச் செல்ல முயல, அந்தத் தடுமாற்றத்தில் சுற்றுலா வேன் டிரைவர் வேனை நிலை தடுமாறிப் பக்கவாட்டில் உள்ள வாய்க்காலில் கவிழ்த்துவிட்டார். இதனால், வேனில் சென்ற பதினைந்து பேரில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.

"எத்தனை விபத்துகள், எத்தனை உயிர்கள் பலியானாலும் வாகன ஓட்டிகள் இப்படித்தான் செயல்படுறாங்க. அதுவும், இந்த மார்க்கத்தில் பாேகும் வாகனங்கள், கண் இமைக்கும் நேரத்தில், ஸ்பீடாகக் கடக்கின்றன. பயணிகள் பயணம் பாேகிறார்களா இல்லை ரேஸ் பாேறாங்களா? 'எங்கேயும் எப்பாேதும்'னு இதைப்பத்தி ஒரு படம் வந்தும், அதைப் பார்த்துட்டு டிரைவர்கள் திருந்தலைனா எப்படி? இதற்கு முதலில் அரசு கடிவாளம் பாேடணும்" என்றார்கள் மக்களில் சிலர்.