வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (05/02/2018)

கடைசி தொடர்பு:14:00 (05/02/2018)

'முடியாததை முடித்துக்காட்டுபவர்தான் மோடி' - ப.சிதம்பரத்துக்கு தமிழிசை அதிரடி பதில்

'ஏழ்மையையும் ஏழைகளையும் புரிந்தவர்களுக்கு, எங்கள் ஏழைப் பங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும்' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '20 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் முக்கிய அமைச்சராகப் பணியாற்றிய ப.சிதம்பரம், தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? அவரை பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பிய சிவகங்கைக்கும் அதை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் அவர், கொண்டுவந்த ஒரு உருப்படியான பெரிய திட்டத்தைச் சொல்ல முடியுமா? அங்கே வங்கிகளையும், ATM சென்டர்களையும் கொண்டுவந்ததைத் தவிர, சிதம்பரம் வேறு என்ன செய்தார்? அகில இந்திய அளவில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக, அவரது தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தை இன்று அடையாளம் கண்ட மத்திய அரசு, அதையும் முன்னேற்றத் திட்டம் தீட்டியுள்ளது.

வேலையின்றி இருப்போர்க்கு கிடைக்கும் வங்கிக் கடன்மூலம், ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால்கூட தினசரி 200 ரூபாய் பெற முடியம் என்று சொன்னதைத் திரித்துக் கூறி, பக்கோடா விற்பவர்களைப் பிச்சைக்காரர்களுக்குச் சமமாக ஒப்பிட்ட செட்டிநாடு சீமான் கண்களுக்கு, சுய வேலைவாய்ப்பு என்பது கேவலமாகத் தோன்றுவது ஏன்? இந்நாட்டு வேலையில்லாப் பட்டதாரிகளை உடனே தன் மகனைப்போல கோடீஸ்வரர்களாக மாற்றும் சிதம்பர ரகசியம் என்ன என்பதை மக்களுடன் பகிர்வாரா சிதம்பரம்?

உலகின் மிகப்பெரிய அளவிலான, மக்கள் உடல்நலம் பேணும் காப்பீட்டுத் திட்டத்தை 50 கோடி மக்களுக்கு எப்படி செயல்படுத்துவார்கள் எனக் கேட்கிறார் சிதம்பரம், அதற்கான நிதி ஆதாரம் எங்கே எனக் கேட்கும் சிதம்பரத்துக்கு, நிதி ஆயூக் தலைவர் அளித்துள்ள பதிலில், ஏற்கெனவே 2000 கோடி உள்ளது. 2 சதவிகித செஸ்வரி மட்டும் போதுமே என்று தெரிவித்துள்ளார். நீங்கள் முடியாது என்று நினைத்ததை முடித்துக்காட்டுபவர்தான் என் தலைவன் மோடி.

ஜி.எஸ்.டி முடியாது என்று விட்டுவிட்டீர்கள். அதனைச் செயல்படுத்திக் காட்டியவர் மோடி. பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை மண் மோகன் சிங் ஆட்சியில் யோசித்தோம் என்றார். அதை நடத்திக்காட்டியவர் மோடி. தூய்மை இந்தியா திட்டத்தைக் கேலி பேசியவர்கள் நீங்கள். ஆனால், அத்திட்டத்தின்மூலம் 60 ஆண்டுகளாக ஆட்சியில் நடக்காத அதிசயமாக 30 கோடி மக்களுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டிலிருந்து 30 கோடி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கி சாதனைப் படைத்த மோடி அரசு, இன்று 60 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது. 5 கோடி பெண்களுக்கு, வெற்றிகரமாக இலவச கேஸ் வழங்கி, இன்று 8 கோடி குடும்பம் என்று இலக்கை நிர்ணயித்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மோடி அரசால் 50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க முடியாதா? நீங்கள் முடியாது என்று சொன்னதை முடித்துக் காட்டுபவர்தான் எங்கள் மோடி' என்று கூறியுள்ளார்.