வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (05/02/2018)

கடைசி தொடர்பு:14:49 (05/02/2018)

`தலைவாழை இலையில் சைவ விருந்து' - கும்பாபிஷேகத்தைக் குளிரவைத்த இஸ்லாமியர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் கிராமத்தில் உள்ள செளந்தரநாயகி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைக் காண வந்த  பக்தர்களுக்கு, அந்த ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பந்தல் போட்டு தலைவாழை இலையில் சைவ விருந்து கொடுத்து அசத்தினர்.

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் கிராமத்தில், கி.பி.10-ம் நூற்றாண்டில் சோழ கேரளீஸ்வரம் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற முதலாம் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட  செளந்தரநாயகி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இதற்குக் கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தினர் முடிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர முயற்சியிலும் கிராம பொதுமக்கள் உட்பட பலரிடமிருந்து நிதியுதவி பெற்றும் கோயில் புனரமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்யப்பட்டு நாள் குறிக்கப்பட்டது. அதன்படி இன்று, கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்பட்டபோதே, பரம்பூர் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி, கும்பாபிஷேகம் காணவரும் பக்தர்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் என முடிவுசெய்தார்கள். அதன்படி, பெரும் பொருட்செலவுசெய்து, அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்கள் வருவதற்கு வசதியாக, கோயிலுக்கு அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டது. டேபிள், சேர் போடப்பட்டது. காலையில் விரதமிருந்து கும்பாபிஷேகம் பார்க்க வந்த பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து, அமரவைத்தார்கள் இஸ்லாமிய இளைஞர்கள். வந்த அனைவருக்கும் அப்பளம், பாயசத்துடன் மணக்க மணக்க சைவ விருந்து அளிக்கப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய முகமது ஃபாரூக் என்பவர், "மத நல்லிணக்கம் என்பது நம் தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளம். அதை வலியுறுத்தும் விதமாகவே இந்த அன்னதானம் நிகழ்ச்சியை நடத்துகிறோம். கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்      டுள்ளார்கள். எங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் மகிழ்வைத் தருகிறது'' என்றார். சாப்பிட்டவர்களும் இஸ்லாமியர்களின் இந்த முயற்சியை மனதாரப் பாராட்டியும் வாழ்த்தியும் சென்றார்கள். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷும் கலந்துகொண்டார்கள்.