ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு; அலறிய மாணவ- மாணவிகள்: தலைகுப்புறக் கவிழ்ந்த கல்லூரிப் பேருந்து

திருப்பூர் அருகே, தனியார் கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் அதிகமான  மாணவ -  மாணவிகள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே செயல்பட்டுவருகிறது, கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில், திருப்பூரிலிருந்து தினந்தோறும் நிறைய மாணவர்கள் அக்கல்லூரிக்குச் சென்றுவருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல இன்றைய தினமும், குன்னத்தூர் என்ற பகுதியில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கிச் சென்றுகொண் டிருந்த பேருந்து, கூலிபாளையம் என்ற பகுதியைக் கடக்கும்போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, பேருந்தில் பயணித்த மாணவ-மாணவிகள் அலறினர். இந்த விபத்தில் 20-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் காயமடைந்தனர்.

பின்னர், அவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள்  உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம்குறித்து விசாரித்தபோது, 'பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தபோதே, ஓட்டுநர் கருப்பசாமிக்கு திடீரென வலிப்பு உண்டாகியிருக்கிறது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து, சாலையோரத்தின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது' என்றனர். விபத்து தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!