’’500 ரூபாய் டீசல்தான்; ஆனால் ரூ.20,000 செலவு!’’ - மீனவர்களின் கச்சத்தீவு வேதனை

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது.

 


கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழா, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள, தமிழக மீனவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விசைப்படகில் மட்டுமே செல்ல வேண்டும், நாட்டுப் படகில் செல்ல அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக, ‘ஆண்டாண்டு காலமாக நாட்டுப்படகுகளில் சென்று வழிபட்டுவந்த எங்களது உரிமை பறிபோயுள்ளது’ என்று கூறி, பாரம்பர்ய மீனவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

சின்னத்தம்பிஇதுகுறித்து, பாரம்பர்ய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பியிடம் பேசினோம். அவர், ‘1974-ல் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், 3 முக்கியமான ஷரத்துகள் தமிழக மீனவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தன. முதலாவது, பாரம்பர்ய மீன்பிடிப் பகுதிகளில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்துக்கொள்ளலாம். இரண்டாவது, கச்சத்தீவில் மீனவர்கள் இறங்கி வலை உலர்த்தலாம் என்பது. மூன்றாவது, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு எந்தவித ஆவணமும் இன்றி மீனவர்கள் சென்று வரலாம் என்பது. கடந்த 1905-ல் அந்த ஆலயம் கட்டப்பட்டது முதல் 2013-ம் ஆண்டு வரை நாட்டுப்படகில் சென்று அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்துகொண்டுவருகிறார்கள்.  

1974-ம் ஆண்டில், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதற்கு முன்பு வரை கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம், தங்கச்சிமடம் பங்குக்கு உட்பட்டது. அதுவரை நடத்தப்பட்ட திருவிழாக்களில், இலங்கை மீனவர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ஆனால், 1974-ம் ஆண்டுக்குப் பின்னர், அது நெடுந்தீவு பங்குக்குச் சென்றது. அதன்பின்னர், அந்தத் திருவிழாவுக்கு நமது மீனவர்கள் விருந்தினர்களாகச் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அந்தத் திருவிழா, இரு நாட்டு மீனவர்கள் சந்தித்துக்கொள்ளும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த சந்திப்பின்போது, மீன்பிடித்தல் தொடர்பான பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளவும், எங்கள் உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் அந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்துவருகிறது. அதனால், அந்தோணியார் திருவிழாவில் பெருவாரியான மீனவர்கள் கலந்துகொள்வார்கள்.

1983-ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து, கச்சத்தீவுக்குச் செல்ல தமிழக மீனவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், 2002-ம் ஆண்டில் மீண்டும் திருவிழா நடத்தப்பட்டது. அதற்காக, நமது மீனவர்களுக்கு இலங்கையிலிருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து, நாட்டுப்படகு சங்கத் தலைவர் ராயப்பன், பாதிரியார் அமல்ராஜ் உள்ளிட்டோருடன் மீனவர்கள் பாம்பனிலிருந்து நாட்டுப்படகுகளில் சென்று திரும்பினர். 2007 வரை 50 படகுகள் திருவிழாவுக்குச் சென்றுவந்தன. 2007 முதல் 2011 வரை இலங்கை உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த நிலையில்,  அந்தோணியார் திருவிழா நடைபெறவில்லை. திருவிழாவுக்குச் சென்றுவருவது உள்ளிட்ட விவகாரங்களை 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் அரசு முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. விசைப்படகுகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறி, நாட்டுப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாட்டுப்படகில் செல்வது பாதுகாப்பானது இல்லை என்று கூறி, அரசு தடைசெய்தது. பாதுகாப்புக் குறைபாடு என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதே உண்மை நிலை. 

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு நாட்டுப்படகும், அரசால் ஆய்வுசெய்யப்பட்டு, பதிவு எண் கொடுக்கப்பட்டவை. அதேபோல, அந்தப் படகுகள் காப்பீடும் செய்யப்பட்டுள்ளன. அளவைப் பொறுத்தவரை விசைப் படகுகளுக்கு இணையாக நாட்டுப் படகுகள் இருக்கின்றன. உதாரணமாக விசைப்படகுகளில் 10 டன் அளவுக்கு மீன்களை வைக்க முடியும் என்றால், நாட்டுப்படகுகளில் 40 டன் அளவுக்கு மீன்களைப் பாதுகாப்பாக வைக்க முடியும். அந்த அளவுக்கு நாட்டுப்படகுகள் பெரிதாக வடிவமைக்கப்படுகின்றன. இரண்டு வகை படகுகளுக்கும் தொழில் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. நாட்டுப் படகுகளில் பாய்ச்சல் வலை என்கிற முறையில், அதாவது கடலில் வலைகளைப் பரப்பி மீன் பிடிப்பது. விசைப் படகுகள், வலைகளைப் பரப்பி இழுவை முறையில் மீன் பிடிக்கும். தொழிலுக்கு ஏற்றார்ப்போல இயந்திரங்கள் மாறுபடுமே தவிர, வேறெந்தவிதமான மாற்றமும் இருக்காது. விசைப்படகுகள் பாதுகாப்பானவை என்றால், ஒக்கி புயலின்போது அவை பாதுகாப்பாக கரை ஒதுங்கியிருக்க வேண்டுமே? எனவே, பாதுகாப்பைக் காரணமாகக்கொண்டு கச்சத்தீவுக்கு நாட்டுப்படகில் செல்வதைத் தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

நாட்டுப் படகுகளுக்குத் தடை விதிப்பதன் மறைமுக நோக்கம் என்னவென்றால், இந்திய-இலங்கை அரசுகள், கச்சத் தீவு ஒப்பந்தத்தைக் காலாவதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தோணியார் கோயில் திருவிழாவுக்காகக் கச்சத்தீவுக்கு பாரம்பரிய மீனவர்கள் சென்றுவருவது, அரசுகளின் இந்த முயற்சிக்குத் தடையாக இருந்துவருகிறது. அதேபோல, கச்சத்தீவுக்கு பணம் கொடுத்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இதனால், ஏழை மீனவர்கள் கச்சத்தீவு செல்வதை நினைத்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பயணிகளைக் கொண்டுவந்து விழா நடத்தப் பார்க்கிறார்கள். அதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், எங்கள் உரிமையைப் பறிக்கும்போதுதான் நாங்கள் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். எங்களிடம் உள்ள நாட்டுப்படகுகளில் 500 ரூபாய்க்கு டீசல் போட்டால், குடும்பத்துடன் நாங்கள் கச்சத்தீவு சென்று திரும்பிவிடுவோம். ஆனால், விசைப்படகுகளில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றுவர, கிட்டத்தட்ட ரூ.20,000 செலவழிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.  பாரம்பர்ய மீனவர்கள் பலருக்கு, அந்த அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தாததால், எங்களுக்கு மனக்குறையும், தொழிலில் குறையும் ஏற்படுகிறது. 

இதை எதிர்த்து, தொடர்ச்சியாக நாங்கள் போராடிவருகிறோம். கடந்தமுறை நீதிமன்றத்துக்குச் சென்றபோது, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. ஆனால், திருவிழா நெருங்கும் நேரம் வரை வழக்கை இழுத்தடித்துவிட்டு, கடைசி நேரத்தில் பாதுகாப்புக் குறைபாடுகளால் நாட்டுப்படகை அனுமதிக்க முடியாது என்று அரசு தரப்பில் கூறிவிடுகிறார்கள். இந்த நிலையில், கச்சத்தீவு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துவருகிறோம். எங்கள் கோரிக்கைகளை அக்கறையுடன் கேட்ட தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர், எங்களுக்கு ஆதரவு கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். மேலும், இதுதொடர்பாக அரசிடம் வலியுறுத்தவும், நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வோம் என்றும் உறுதியளித்திருக்கிறார்கள்’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!