வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (05/02/2018)

கடைசி தொடர்பு:15:40 (05/02/2018)

`முதல்வர் பழனிசாமி தவறான தகவ‌ல் தெரிவித்துவிட்டார்' - கே.ஆர்.பி அணையைப் பார்வையிட்ட ஸ்டாலினிடம் விவசாயிகள் குமுறல்!

கேஆர்பி அணையில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு முதலாவது ஷட்டர் உடைந்து அணையில் இருந்த தண்ணீர் மளமளவென வெளியேறியது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

கேஆர்பி அணை ஸ்டாலின்

அணையின் ஷட்டர் உடைந்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவும், பராமரிப்புக்கு ஒதுக்கிய நிதியில் முறைகேடுமே காரணம் என்று விவசாயச் சங்கங்கள் குற்றச்சாட்டு கூறின. ஆனால், பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் முருக சுப்பிரமணியம், கேஆர்பி அணை ஷட்டர் உடைந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில், `ஷட்டர் உடைந்ததற்குப் பெங்களூரில் இருந்துவரும் கழிவு நீர் முக்கியக் காரணம்' என்றும், கழிவு நீரில் கலந்துள்ள ரசாயனம் அணையின் ஷட்டர் வெகுவாகப் பாதிப்படைந்து, வலுவிழந்து உடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். 

அணை ஷட்டர் பாவையிடும் ஸ்டாலின்

பொதுப்பணித்துறையைக் கவனிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை ஷட்டர் உடைப்புக்குக் காரணம் கர்நாடகா கழிவு அதிக அளவு வருகிறது. அந்தக் கழிவு நீரில் அமிலத்தன்மை அதிக அளவு இருந்ததால் ஷட்டர் பாதிப்படைந்து உடைந்துவிட்டதாகச் சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். இன்று தர்மபுரி முன்னாள் எம்எல்ஏ மனோகரன் இல்லத் திருமணத்துக்கு வருகை தந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அப்படியே கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்குச் சென்று பார்வையிட்டார்., அப்போது தி.மு.க. கட்சி நிர்வாகிகளிடம் அணை குறித்துக் கருத்து கேட்காமல் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் இராமகவுண்டரை கேஆர்பி அணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கேஆர்பி அணை ஷட்டர் உடைந்த பகுதிகளை நடந்தே சென்று பார்வையிட்டு அணை குறித்த தகவல்களைக் கேட்டு அறிந்தார். 

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் குறிப்பிட்டதுபோல தண்ணீரில் உள்ள அமிலத்தன்மையால்தான் ஷட்டர் பாதிப்பு அடைந்து உடைந்துவிட்டதா? என்று கேட்டுள்ளார். தென்பெண்ணை ஆற்று நீரில் அமிலத்தன்மை கிடையாது. கர்நாடகா அரசு கழிவு நீரை சுத்திகரித்துத்தான் தென்பெண்ணை ஆற்றில் கலந்துவிடுகிறது. அதனால்தான் கேஆர்பி அணையில் மீன்கள் நன்றாக வளர்கின்றது. ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய்க்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அமிலத்தன்மை உள்ள நீர் என்றால் மீன்கள் வளராது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதேபோல தென்பெண்ணை ஆற்று நீரை மக்களும், கால்நடைகளுக்கும் குடிநீராகப் பயன்படுத்தி வருகிறோம்.  சட்டமன்றத்தில் முதல்வர் தவறான தகவல் தெரிவித்துவிட்டார் என்று இராமகவுண்டர் கூறியுள்ளார். இதை உறுதி செய்துகொண்ட ஸ்டாலின் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க