புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உறுதி! அடித்துச்சொல்லும் அ.தி.மு.க

'காங்கிரஸ் கட்சிக்கு எதிராக யார் ஆட்சி அமைத்தாலும், அ.தி.மு.க அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்' என்று புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ., அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக

புதுச்சேரியில், ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவந்தது. சென்ற ஆண்டு குடியரசு தின விழாவின்போது ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் புறக்கணித்த நிலையில், முதல்வர் நாராயணசாமி மட்டும் கலந்துகொண்டார். பெயரளவுக்கு மட்டுமே கலந்துகொண்ட அவரும், சில நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறினார். இரு தரப்புக்குமிடையே மோதல் நிலவி வந்ததால், அரசின் அன்றாடப் பணிகள்கூட முடங்கியது. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அன்றிலிருந்து முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆளுநர் கிரண்பேடியை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டனர். ஆட்சியை சுமுகமாக நடத்தவே முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கிரண்பேடியுடன் சரண் அடைந்துவிட்டனர் என்று தகவல் பரவியது. இது ஒருபுறமிருக்க, புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான பாஸ்கர், ரவுடிகளுடன் சென்று போக்குவரத்துத்துறை அதிகாரிகளை மிரட்டினார் என்றும், அது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன் என்றும் ஆளுநர் கிரண்பேடி கூறியிருந்தார். அதையடுத்து, சபாநாயகரிடம் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகாரை அளித்திருந்தது அ.தி.மு.க.

அதிமுக

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவர் அன்பழகன், 'புதுச்சேரியின் முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநரின் மலிவு விளம்பர மோதல் போக்கினால், மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. 2015-16 நிதியாண்டில் இயற்கை பேரிடருக்காக 340 கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு, அதில் 188 கோடி ரூபாயை அப்போதைய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரிக்குப் பெற்றுவந்தார். ஆனால், தற்போதைய முதல்வர் நாராயணசாமி செயலற்றிருக்கிறார். பி.ஆர்.டி.சி, பாப்ஸ்கோ, ஏ.எஃப்.டி மில் எனப் பல ஊழல் குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க கூறியுள்ள நிலையில், அதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது இலவச மிக்சி, கிரைண்டரில் ஊழல் நடந்துள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் இவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால், அறிக்கையில் கூறாத வீட்டு வரி, மின் கட்டணம், தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்திவிட்டனர். ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, துணை நிலை ஆளுநரிடம் முதல்வர் நாராயணசாமி முழுமையாக சரணடைந்துவிட்டார். ஆனால், புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உறுதி. ஆளுநருடன் கைகோர்த்துவிட்டு, அனைத்துக் கட்சிகளையும் அவமதித்துவிட்டார். அரசின்மீதும் சபாநாயகார்மீதும் நம்பிக்கை இல்லாததால், ஆளுநர்மீது கொடுக்கப்பட்ட உரிமை மீறல் புகாரை திரும்பப் பெறுகிறோம். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக யார் ஆட்சி அமைத்தாலும், அ.தி.மு.க அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!