வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (05/02/2018)

கடைசி தொடர்பு:17:15 (05/02/2018)

`கோயில்கள் அனைத்தும் குரங்குக் கையில் கொடுத்த பூமாலையாக மாறிவிட்டன' - அரசைச் சாடிய ஹெச்.ராஜா 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கிழக்குக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும். இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்' என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தீ விபத்தில் கிழக்குக் கோபுர வாயிலில் அமைந்துள்ள கடைகள் உட்பட ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள வீர வசந்தராயர் மண்டபமும் கடும் சேதத்துக்கு ஆளானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்து அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கோயில் நிர்வாகத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில், இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் அனைத்தும் குரங்குக் கையில் பூமாலையாக மாறிவிட்டன. கோயில் வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகளின் உரிமத்தைக் கோயில் நிர்வாக இணை இயக்குநர் சமர்ப்பிக்க வேண்டும். கோயிலுக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.

கோயிலில் இருக்கின்ற எந்தக் கடையிலும் மின்சார மீட்டர் பொருத்தப்படவில்லை. தூண்கள் சேதம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வருத்தமும் இல்லை. தற்போது பூட்டப்பட்டுள்ள அனைத்துக் கடைகளையும் உடனே திறக்க அனுமதிக்கக் கூடாது. இந்தத் தீ விபத்து திட்டமிட்ட சதியாக இருக்கலாம். இரவு விபத்து நடைபெற்றபோது, நான்கு பேர் அதை அணைக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும். மேலும், உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்துக் கோயில்களை இந்து அறநிலையத்துறையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. ஆகையால் இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.