150 வன காவலர்கள் தேடுதல் வேட்டை: 3 பேரைக் கொன்ற காட்டு யானை சிக்கியது

யானைக் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி செம்மண் குட்டை வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது. பகலில் வனப்பகுதியில் இருக்கும் யானை இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள அலகுபாவி, சென்னப்பள்ளி, சின்னாறு, டேம் எப்பாளம் கிராமங்களில் நுழைந்து விவசாய நிலங்களை நாசம் செய்ததுடன் மூன்று விவசாயிகளைக் கொன்றுள்ளது. 

காட்டு யானை சிக்கியது

கடந்த 3-ம் தேதி சூளகிரி அடுத்துள்ள சின்னாறு பந்தரகுட்டைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜப்பா, தனது நிலத்தில் இருந்தபோது யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜப்பாவின் உடலை மீட்கச் சென்ற ரங்கநாதன், முனிகிருஷ்ணன் ஆகிய இருவரும் போராடியபோது அவர்களையும் யானை தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியதில் இருவரும் படுகாயமடைந்தனர். 

யானை

4-ம் தேதி காலை சூளகிரி தேவர்குட்டப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி முனிராஜ் சின்னாறு நோக்கி நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காட்டு யானையிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால், யானை அவரை விரட்டிச் சென்று தூக்கி வீசி தந்தத்தால் குத்திக் கொன்றது. யானை குத்தும்போது பாறையில் பட்டு தந்தம் உடைந்தது. முனிராஜ் உறவினர்கள் யானையை விரட்டும் வரையில் நாங்கள் உடலை எடுக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களைச் சமாதானப்படுத்தி இறந்த முனிராஜின் உடலை அங்கிருந்து மீட்டு அனுப்பி வைத்தனர். 

மயக்க ஊசி

ஒற்றை யானை அட்டகாசத்தால் தொடர்ந்து விவசாயிகள் பலியானதால் தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் உலகநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மயக்க ஊசி போட்டு யானையைப் பிடித்து வனப்பகுதிக்குள்விட பெஷல் டீம் அமைக்கப்பட்டது. இதற்காகக் கர்நாடக பன்னார்கட்டாவை சேர்ந்த கால்நடை டாக்டர் அருண் ஷா மற்றும் ஓசூர் கால்நடை டாக்டர் பிரகாஷ் அடங்கிய தனித் தனி டீம் துப்பாக்கிகளுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த வனப்பகுதியில் கண்காணித்து வந்தனர். யானையைப் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட பெஷல் வாகனமும் கொண்டு வரப்பட்டது.  இந்த நிலையில் இன்று 5ம் தேதி வனப்பகுதியை சார்ந்துள்ள ஒட்டையனூர் கிராமத்தைச் சேர்ந்த தேவன் இரவு நேரக் காவலுக்காக விவசாய நிலத்துக்குச் சென்றபோது மனித வாடையை உணர்ந்து வந்த யானை தேவனை மிதித்துக் கொன்றுள்ளது. 

இன்று காலை முதலே 150 மேற்பட்ட வன காவலர்கள் தனித் தனி குழுவாகச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சாமல்பள்ளம் அடுத்துள்ள ராமபுரம் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஓசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் டீம் மூன்று மயக்க ஊசிகளைச் செலுத்தி யானை மயக்கம் அடையச் செய்து பிடித்து உரிகம் வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட வாகனத்தில் ஏற்றினர். தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் யானையால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த விவசாயக் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கவும் பிடிபட்ட யானையைப் பார்வையிடவும் வருகை தந்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!